Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறப்பு

டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறப்பு

டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறப்பு

டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறப்பு

UPDATED : ஜூலை 31, 2024 06:58 PMADDED : ஜூலை 31, 2024 12:08 PM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்: கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், மேட்டூர் அணை கடந்த 28ம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்திற்காகவும், ஆடி பெருக்கு விழாவை கொண்டாடவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று அணை 120 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கரூர், முக்கொம்பு பகுதிகளை கடந்து, தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு இன்று(31ம் தேதி)அதிகாலை வந்தது. இதையடுத்து கல்லணையில் உள்ள அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, கரிகால சோழன் சிலை ஆகிய சிலைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இந்த சிலைகளுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர். முன்னதாக கருப்பணச்சாமி, ஆஞ்நேயருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின், மேளதாளத்துடன் அமைச்சர்கள் நேரு, மகேஷ்,டி.ஆர்.பி., ராஜா, மெய்யநாதன், எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர்கள், அதிகாரிகள், விவசாயிகள் ஊர்வலமாக சென்று, முதலில், காவிரியில் தண்ணீரை திறந்துவிட்டனர். இதையடுத்து, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது விவசாயம் செழிக்க வேண்டி பூக்களையும், நவதானியங்களையும் ஆற்றில் விட்டனர்.

பிறகு காவிரியில், 40 ஷட்டர்களும், வெண்ணாற்றில், 33, கொள்ளிடத்தில், 30, கல்லணைக் கால்வாயில், ஆறு, மணற்போக்கியில், 5, கோவிலடி மற்றும் பிள்ளைவாய்க்காலில் தலா ஒரு ஷட்டர்கள் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டது.

இதன்படி முதல் கட்டமாக காவிரியில் 1500 கன அடி,வெண்ணாறு ஆயிரம் கன அடி,கல்லணை கால்வாய் 500 கன அடி, கொள்ளிடம் 400 கன அடி என தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக உயர்த்தப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 12 லட்சம் ஏக்கர் அளவுக்கு பாசன வசதி பெறும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us