சிங்கப்பூர் அமைச்சர் முதல்வருடன் சந்திப்பு
சிங்கப்பூர் அமைச்சர் முதல்வருடன் சந்திப்பு
சிங்கப்பூர் அமைச்சர் முதல்வருடன் சந்திப்பு
ADDED : ஜன 11, 2024 11:12 PM

சென்னை:சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம், நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், சென்னையில் அயலகத் தமிழர் தின விழா, இரண்டு நாட்கள் நடக்கிறது.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக, சிங்கப்பூர் நாட்டின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகம், தமிழகம் வந்துள்ளார்.
அவர் நேற்று முதல்வர் ஸ்டாலினை, அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அவரை வரவேற்ற முதல்வர், அவருக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.
அப்போது, தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சிங்கப்பூர் நாட்டு துணை துாதர் எடக்ர் பெங்க், உதவி இயக்குனர் ஷான் லிம் யங் சென், முதுநிலை மேலாளர் சுரேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
சந்திப்பு தொடர்பாக, முதல்வர் தன் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு சிங்கப்பூர் பயணத்தின் போது, நான் விடுத்த அழைப்பை ஏற்று, அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்க தமிழகம் வந்துள்ள, சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்தை, என் இல்லத்தில் வரவேற்று மகிழ்ந்தேன்.
உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றியை தொடர்ந்து நடந்துள்ள, எங்களின் சந்திப்பு, கல்வி, பண்பாடு, தொழில் என, பல்வேறு தளங்களில் வளர்ந்து, நாட்டுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பயனளிக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.