Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பாசனத்திற்கு நீரின்றி கடைமடையில் தரிசாகும் நிலங்கள்

பாசனத்திற்கு நீரின்றி கடைமடையில் தரிசாகும் நிலங்கள்

பாசனத்திற்கு நீரின்றி கடைமடையில் தரிசாகும் நிலங்கள்

பாசனத்திற்கு நீரின்றி கடைமடையில் தரிசாகும் நிலங்கள்

UPDATED : ஆக 05, 2024 07:39 AMADDED : ஆக 05, 2024 02:32 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மயிலாடுதுறை: டெல்டாவின் கடைமடை பகுதியில் பாசனத்திற்கு தண்ணீரின்றி விளை நிலங்கள் தரிசாக கிடக்கும் நிலையில், பெருக்கெடுத்து வரும் காவிரி நீர், கொள்ளிடம் வழியே வீணாக கடலில் கலப்பது வேதனையாக உள்ளது.

சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் சாகுபடி செய்யப்படும் காவிரி டெல்டா மற்றும் கடைமடை பகுதியில், ஒவ்வொரு போக சாகுபடியின் போதும், கர்நாடகத்திடம் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வாயிலாக வாதாடி, போராடி தண்ணீரை பெறும் நிலை உள்ளது.

இவ்வாண்டும் காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் கை விரித்த நிலையில், இயற்கையின் வரமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து, கர்நாடக அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து, கடந்த 28ம் தேதி மேட்டூர் அணையும், 31ம் தேதி கல்லணையும் திறக்கப்பட்டு, நேற்று முன்தினம் கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றில், வினாடிக்கு 81,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நேற்று மாலை வராத நிலையில், கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று முன்தினம் மதியம், மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது.

கானல் நீரானது


கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட, 2 லட்சம் கன அடிக்கு மேலான நீர் பழையாறு என்ற இடத்தில் கடலில் கலக்கிறது.

உபரி நீரை பாசனத்திற்கு ஆறு மற்றும் வாய்க்கால்கள் வழியே திருப்பி விட முடியாததால், மாவட்டத்தில் உள்ள வீரசோழன் ஆறு, நண்டலாறு, மகிமலையாறு, அய்யாவையனாறு, மஞ்சள் ஆறு, புது மண்ணியாறு உள்ளிட்ட ஆறுகளும், வாய்க்கால்களும் வறண்டு கிடக்கின்றன.

கடைமடை பகுதியில் பம்ப் செட் வாயிலாக, 93,000 ஏக்கரில் நெல்லும், 15,000 ஏக்கரில் பருத்தியும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், பெரும்பாலான விவசாய நிலங்கள் தரிசாக விடப்பட்டு, விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றில் வரும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, ஆதனுார்- - குமாரமங்கலம் இடையே அமைக்கப்பட்டுள்ள கதவணை போல ஒவ்வொரு 3 கி.மீ., துாரத்திலும் அணைகளை கட்டி, தண்ணீரை தேக்கி விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கை கானல் நீராகவே உள்ளது.

ஆடிப்பெருக்கு


தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழா, காவிரி மற்றும் கிளை நதிகள், வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், கலையிழந்து காணப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே ஆடிப்பெருக்கை கொண்டாடும் நிலைக்குதள்ளப்பட்டனர்.

மயிலாடுதுறை நகர் பகுதி மக்கள், காவிரி துலா கட்டத்தில் நகராட்சி சார்பில் தண்ணீர் நிரப்பப்பட்ட புஷ்கர தொட்டியில் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

முன்கூட்டியே கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமங்களான நாதல்படுகை, முதலை மேடு திட்டு, வெள்ள மணல் ஆகிய கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு பல நுாறு ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி, பருத்தி, கீரை தோட்டக்கலை பயிர்கள் முற்றிலுமாக நாசமாகின.

வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் உள்ள மக்களையும், கால்நடைகளையும் மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை மற்றும் போலீசார் இணைந்து தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us