ரூ.1,675 கோடி திட்டத்திற்கு 'அவுட்சோர்சிங்'கில் ஆள்
ரூ.1,675 கோடி திட்டத்திற்கு 'அவுட்சோர்சிங்'கில் ஆள்
ரூ.1,675 கோடி திட்டத்திற்கு 'அவுட்சோர்சிங்'கில் ஆள்

சென்னை:தமிழக நெய்தல் மீட்சி திட்டத்துக்கு, 'அவுட்சோர்சிங்' முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கான பணிகளை வனத் துறை துவக்கி உள்ளது.
தமிழகத்தில் கடலோர பகுதி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதற்காக, தமிழக நெய்தல் மீட்சி திட்டம் உருவாக்கப்பட்டது. உலக வங்கி உதவியுடன், 1,675 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் இத்திட்ட பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை, 14 கடலோர மாவட்டங்களில், 1,076 கி.மீ., தொலைவுக்கு கடற்கரைகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூரில் பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா, சென்னை, நாகப்பட்டினத்தில் கடலாமை பாதுகாப்பு மையம், தஞ்சை மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கப்படுகின்றன.
மேலும், கடற்கரையோர ஈர நிலங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களும் இதில் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்காக, நிர்வாக அமைப்பை ஏற்படுத்தும் பணிகளை வனத் துறை முடுக்கி விட்டுள்ளது. முதற்கட்டமாக, சிறப்பு திட்ட கண்காணிப்பு பிரிவை ஏற்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.
இதில், தொழில்நுட்பம் சாராத பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது.
பொதுவான நடைமுறை அடிப்படையில் ஒப்பந்த முறையில், இதற்கான பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'அவுட்சோர்சிங்' முறையில் பணியாளர்களை, தனியார் மனிதவள நிறுவனங்கள் வாயிலாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான மனிதவள நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.
காரணம் என்ன?
இதுகுறித்து, வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நெய்தல் மீட்சி திட்டம் தற்போதைய நிலவரப்படி, ஐந்து ஆண்டுகளுக்கான திட்டமாக உள்ளது. இதற்கு நிரந்தரமாக பணியாளர்களை தேர்வு செய்வது, நடைமுறையில் சாத்தியமில்லை.
மேலும், இதற்கு நிதி வழங்கும் உலக வங்கி, சர்வதேச அளவில் பின்பற்றப்படும் பல்வேறு நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே, 'அவுட்சோர்சிங்' முறையில் பணியாளர்களை நியமிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.