Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/'தினமலர்' நாளிதழ் ஆசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: அமெரிக்க உலக தமிழ் பல்கலை வழங்கியது

'தினமலர்' நாளிதழ் ஆசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: அமெரிக்க உலக தமிழ் பல்கலை வழங்கியது

'தினமலர்' நாளிதழ் ஆசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: அமெரிக்க உலக தமிழ் பல்கலை வழங்கியது

'தினமலர்' நாளிதழ் ஆசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: அமெரிக்க உலக தமிழ் பல்கலை வழங்கியது

UPDATED : மார் 24, 2025 09:39 PMADDED : மார் 24, 2025 04:56 AM


Google News
Latest Tamil News
சென்னை: அமெரிக்காவின் வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள, 'அமெரிக்க உலகத் தமிழ் பல்கலை' சார்பில், 'தினமலர்' நாளிதழ் ஆசிரியர் டாக்டர் கி.ராமசுப்புவுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதை, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் வழங்கினார்.

வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ் பல்கலை சார்பில், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா, சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது.

முனைவர் பட்டம்


அதில், 'தினமலர்' நாளிதழ், 'வாரமலர்' இணைப்பிதழின் ஆசிரியர் கி.ராமசுப்பு, மகப்பேறு டாக்டர் தாமரை ஹரிபாபு ஆகியோருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

உன்னிகிருஷ்ணன் பிள்ளை, ஹேமாபாண்டே, ஆறுமுகம் கணேசன், விஜய்ஜூட், இளந்திருமாறன் பெரியசாமி, பாக்கியசெல்வி, மோகனவேலு, சரவணன் ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டன.

விருதுகளை வழங்கி, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் பேசியதாவது:


உலகத் தமிழ் பல்கலையை, ஷெல்வினுக்கு பின், அதன் இந்திய தலைவராக உள்ள எஸ்.பி.பெருமாள்ஜி நிர்வகித்து வரும் நிலையில், மிகவும் தகுதி உடையோருக்கு, விருதுகளையும், மதிப்புறு முனைவர் பட்டங்களையும் வழங்கி இருப்பது சிறப்பு. முக்கியமாக, தமிழ் நாளிதழ்களில், சிறப்பாக சேவை செய்து வரும், 'தினமலர்' நாளிதழின் ஆசிரியர் கி.ராமசுப்புவுக்கும், 50,000க்கும் மேற்பட்டோருக்கு பிரசவம் பார்த்துள்ள, மகப்பேறு மருத்துவர் தாமரை ஹரிபாபுவுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக, சாதித்ததற்காக விருதுகள் வழங்கப்பட்டாலும், அவர்கள் இன்னும் அவரவர் துறைகளில் நிறைய சாதிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுவதற்காகவும், இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

'மணிமேகலை' பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் பேசியதாவது:


தமிழில் மக்கள் பிரச்னைகளின் குரலாகவே வெளிவரும், 'தினமலர்' நாளிதழின் ஆசிரியரான கி.ராமசுப்பு, வாரமலர் இணைப்பிதழின் ஆசிரியராகவும் உள்ளார். அவர் எந்த இடத்திலும் தன்னை முகம் காட்டி முன்நிறுத்திக் கொள்ளாத பண்பாளர்.

ஒற்றுமை உள்ளது


இன்று வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதிலும், அதைக் கடைப்பிடித்துள்ளார். அவருக்கு பதில், தன் நிறுவனத்தில் 40 ஆண்டுகளாக, மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ள கல்பலதாவை அனுப்பி உள்ளார். அவருக்கும், மகப்பேறு மருத்துவர் தாமரை ஹரிபாபுவுக்கும் வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.

விருதாளர் சார்பில், டாக்டர் தாமரை ஹரிபாபு பேசியதாவது:


மலர்களில் தாமரை ஒன்றுதான், பூலோகத்திலும், தேவலோகத்திலும் உள்ள மலராக குறிப்பிடப்படுகிறது. அதனால், தாமரையின் மகத்துவம் பெரியது. அந்த வகையில், இன்று விருதுபெறும் நானும் தாமரை; 'தினமலர்' பத்திரிகையின் 'லோகோ'வும் தாமரை என்பதில் ஒற்றுமை உள்ளது.

முதியோருக்கும், இளையோருக்கும், உபயோகமான செய்திகளை தாங்கிய இதழாக, 'வாரமலர்' வெளிவருகிறது. அதில் வெளியாகும் குறுக்கெழுத்து போட்டிகளில், பலர் பரிசு பெறுகின்றனர். இது போன்றவற்றால் தான், வீட்டில் உள்ளோருக்கும் தமிழ் வாசிப்பு திறன் அதிகரிக்கிறது. இந்த விருது, சமூக சேவைக்கான சிறந்த அங்கீகாரம். உலகத்தமிழ் பல்கலைக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், காமராஜர் பல்கலை முன்னாள் பதிவாளர் ராஜியகொடி, புலவர் சங்கரலிங்கனார், புற்றுநோய் சிறப்பு மருத்துவர் மைக்கேல் ஆஞ்சலோ ஜோதிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us