மணிப்பூரில் அமைதி நிலைநாட்டிவிட்டு பின் தமிழகம் வரட்டும்: சேகர்பாபு
மணிப்பூரில் அமைதி நிலைநாட்டிவிட்டு பின் தமிழகம் வரட்டும்: சேகர்பாபு
மணிப்பூரில் அமைதி நிலைநாட்டிவிட்டு பின் தமிழகம் வரட்டும்: சேகர்பாபு
ADDED : ஜூன் 11, 2025 03:34 AM

சென்னை : சென்னையில், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:
தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரித்திருக்கிறது என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அங்கலாய்த்து இருக்கிறார்.
அவர், அடுத்தவர் முதுகில் அழுக்கு இருக்கிறது என்று சொல்வதற்கு முன், தன்னுடைய முதுகில் இருக்கும் அழுக்கைப் பார்க்க வேண்டும்.
பா.ஜ., ஆளும் மாநிலங்களில் என்ன நிலை என்பதைப் பார்த்துவிட்டு, தமிழகம் குறித்து குறை சொல்ல வேண்டும். அதற்காக, குழந்தை திருமணத்தை தி.மு.க.,வோ, தமிழக அரசோ ஆதரிக்கவில்லை.
இது தொடர்பான விழிப்புணர்வு எல்லா நிலைகளிலும் அரசாலும், அரசு அதிகாரிகளாலும் ஏற்படுத்தப்படுகிறது. மீறி நடக்கும் திருமணங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
மணிப்பூரில் கொஞ்ச காலம் ஓய்ந்திருந்த கலவரம், மீண்டும் துவங்கி இருக்கிறது. சொல்லப் போனால், கலவரம் தொடருகிறது. அங்கே, மத்திய அரசும் பா.ஜ.,வும் என்ன செய்து கொண்டிருக்கிறது? இதேபோல பா.ஜ., ஆளும் பல மாநிலங்களிலும் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லாத நிலை உள்ளது.
ஆனால், தமிழகத்தில் எவ்வித புகார் வந்தாலும், அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுபவர் நம்முடைய முதல்வர் ஸ்டாலின். அப்படியொரு முதல்வரை தமிழகம் பெற்றுள்ளது.
கொலை நகரமான மணிப்பூருக்குச் சென்று, அங்கு அமைதியை நிலைநாட்டிவிட்டு வந்து, தமிழகத்தை கொலை நகரம் என அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.,வினர் சொல்லட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.