நம்மை மாற்றுவோம் ... நம்மில் அக்கறை கொள்வோம்
நம்மை மாற்றுவோம் ... நம்மில் அக்கறை கொள்வோம்
நம்மை மாற்றுவோம் ... நம்மில் அக்கறை கொள்வோம்
ADDED : ஜன 01, 2024 02:14 AM

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஏதாவது உறுதிமொழி ஏற்கிறோம். சில நாட்கள் ஆர்வத்துடன் கடைபிடிக்கிறோம். பின்னர் அந்த உறுதிமொழி அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்காக காத்திருக்கிறது. அவ்வாறு இல்லாமல் இந்த ஆண்டை தொடங்கும் போது கொஞ்சம் சிந்தியுங்கள்.
இருபது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்தியாவை நீரிழிவு நோயின் தலைநகரமாக மாற்றி இருக்கிறது. இதய நோய்களால் அதிக மரணங்கள் ஏற்படுகின்றன. புற்று நோய் மரணங்கள் வரும் காலத்தில் 57 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என எச்சரிக்கைகள் வருகின்றன. இதற்காக சிகிச்சைகள் பெறுவதற்கு 4.58 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியர்கள் செலவிட வேண்டியிருக்கும் என்கிறார்கள். இந்தியா 5 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார உற்பத்தி மதிப்பை எட்டுவதற்கு தீவிரமாக இருக்கும் வேளையில் மருத்துவத்திற்காக மட்டுமே அந்த தொகையை செலவு செய்ய வேண்டியிருப்பது வருத்தமான விஷயம்.
நீரிழிவு நோய், இதய நோய், புற்று நோய், வாத நோய்களைக் கட்டுப்படுத்துவது அரசிடம் இல்லை. அது தனி நபரிடமும் உள்ளது. துரித உணவுகளை துரத்தி துரத்தி உண்பது, உடல் உழைப்பை மறுப்பது, அலைபேசியில் நமது எதிர்ப்பு சக்தியை எல்லாம் கரைத்துக் கொள்வது, மது, புகை, போதை பழக்கங்கள், அத்துடன் வீடு, வேலை, வெளியிடம் அனைத்திலும் பரபரப்பு, மன உளைச்சல், எரிச்சல், ஓய்வு இல்லாமை உள்ளிட்ட இவையெல்லாம் தான் இந்த நோய்கள் அதிகரிக்கக் காரணமாக இருக்கின்றன.
உடலே மூலதனம்
நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் உடல் தான் உங்களுக்கான மூலதனம். உடல் இயங்கா விட்டால் வருமானத்திற்கு வழி இல்லை. இத்தனை ஆண்டுகளில் என்ன செய்தோம் என யோசித்துக் கொண்டிருக்காமல் உங்களுக்காக, சந்ததிக்காக உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தியே ஆகவேண்டும்.
தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடலையும் உள்ளத்தையும் உறுதி செய்வதற்கு நீங்கள் ஒதுக்கியே ஆக வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்காமல் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள்.
உடல் நிலையின் போக்கில் உங்கள் இயக்கத்தை முடக்கிக் கொள்ளாமல், உங்கள் விருப்பத்தின் படி உடல் இயக்கத்தை மாற்ற முயற்சியுங்கள்.
சுவை தரும் உணவுகளை குறைத்து பலம் தரும் உணவுகளை உண்பதை அதிகரியுங்கள். கண்களுக்கு போதுமான ஓய்வு கொடுங்கள். நடை பயிற்சி, ஓட்டப் பயிற்சி, சைக்கிளிங், எளிய உடற் பயிற்சி, யோகா எது உங்களால் முடிகிறதோ நிச்சயமாக செய்யுங்கள். மது, போதை பழக்கங்களை கைவிடுங்கள்.
இவற்றை இன்றே தொடங்குங்கள். உற்சாகமான எதிர்காலத்திற்கு அடித்தளமிடுங்கள். நமக்காகவும் நம் தலைமுறைக்காகவும் வேண்டாம் மறுமொழி. தொடருவோம் உறுதிமொழி.நலமான நாளை ஒவ்வொரு நாளும் தொடரட்டும்.
பி.நீலக்கண்ணன்
தலைமை நிர்வாக அதிகாரி
அப்போலோ மருத்துவமனை மதுரை