பின்னலாடை ஏற்றுமதி ரூ.56,221 கோடி; திருப்பூர் பங்களிப்பு மட்டும் 55 சதவீதம்
பின்னலாடை ஏற்றுமதி ரூ.56,221 கோடி; திருப்பூர் பங்களிப்பு மட்டும் 55 சதவீதம்
பின்னலாடை ஏற்றுமதி ரூ.56,221 கோடி; திருப்பூர் பங்களிப்பு மட்டும் 55 சதவீதம்
ADDED : பிப் 12, 2024 06:05 AM
திருப்பூர் : நம் நாட்டில், பல்வேறு சவால்களையும் மீறி, தொழில் துறையினரின் விடா முயற்சியால், கடந்த ஆண்டில், 56, 221 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது.
கடந்த ஆண்டில், பஞ்சு மற்றும் நுால் விலை சீராக இருந்தும், சர்வதேச சந்தைகளில் மந்த நிலை நிலவியது. திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பெரிய வளர்ச்சி பெறவில்லை; வழக்கமான ஆர்டர்கள் மட்டும் தக்க வைக்கப்பட்டன.
ஒட்டுமொத்த பின்னலாடை தொழில்துறையினரின் விடா முயற்சியால், முந்தைய ஆண்டுகளுக்கு இணையாக ஏற்றுமதி நடந்துள்ளது.
கடந்த ஆண்டில், இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி, 56, 221 கோடி ரூபாய் அளவு நடந்துள்ளது. திருப்பூரில் இருந்து மட்டும், 30, 853 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது.
நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், திருப்பூரின் பங்களிப்பு மட்டும், 55 சதவீதமாக உள்ளது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டு ஒரு விசித்திரமான ஆண்டு. உள்நாட்டில் அனைத்து வசதிகளுடன் உற்பத்திக்கு தயாராக இருந்தும், சர்வதேச பிரச்னைகளால் வர்த்தகம் பாதித்தது.
'இருப்பினும், தளராமல் முயற்சி எடுத்ததால், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், வளர்ச்சி பாதைக்கு திரும்பியது. செயற்கை நுாலிழை பின்னலாடை உற்பத்தியும் வெற்றிகரமாக நடந்து வருவதால், இனிவரும் ஆண்டுகளில், ஏற்றுமதி வர்த்தகம் மேலும் வளர்ச்சி பெறும்' என்றனர்.