கீழடி விவகாரம்: எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை: மத்திய அமைச்சர்
கீழடி விவகாரம்: எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை: மத்திய அமைச்சர்
கீழடி விவகாரம்: எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை: மத்திய அமைச்சர்
ADDED : ஜூன் 11, 2025 09:11 PM

சென்னை : ''கீழடி தொடர்பான எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை,'' என மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்த மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்,''தமிழகத்தில் நடக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள், அறிவியல் பூர்வமாக, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அங்கீகாரம் வழங்குவதற்கு முன், அதிக நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அங்கீகாரம் வழங்கப்படும். இது, மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். '5,350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள்' என்றெல்லாம், உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக் கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் மத்திய அரசு ஒப்புக் கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? எனக்கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் கஜேந்திர ஷெகாவத் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.
அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல்தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழகம் பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் - பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.