Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்

அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்

அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்

அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்

ADDED : மார் 25, 2025 11:03 PM


Google News
சென்னை:'டாஸ்மாக்' நிறுவனத்தில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

சென்னையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், மார்ச் 6ம் தேதி முதல், 8ம் தேதி வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது; பார் உரிமம் வழங்கியது; மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு 'டெண்டர்' வழங்கியது போன்றவற்றில், 1000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக, அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத்துறையின் இந்த சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது என்றும், மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனை சட்ட விரோதமானது என்று அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்தக் கூடாது என, அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக உள்துறை செயலர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, 'அமலாக்கத் துறை பதிலளிக்க வேண்டும்; அதுவரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தியது என்பது குறித்த விபரங்களை, அமலாக்கத்துறை பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அறிவித்தனர். மேலும், தலைமை நீதிபதியிடம் இருந்து உரிய உத்தரவுகளை பெற்று, இந்த வழக்கை, வேறு அமர்வின் முன் பட்டியலிடும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us