சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது: பழனிசாமி
சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது: பழனிசாமி
சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது: பழனிசாமி
ADDED : ஜூன் 27, 2025 07:25 AM
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் அறிக்கை:
வேலுார் மாவட்டம், காட்பாடியில் நடந்த அரசு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலின், 'ரயில் பயணியர் முகத்தில் வழக்கமான உற்சாகமும், மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும், குறைந்து வரும் சாதாரண வகுப்பு பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியை களவாடிஇருக்கிறது' என்று கூறியிருக்கிறார்.
ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. ஆனால், பைசா கணக்கில் உயர்த்தப்பட உள்ளதாக வந்த செய்தியை கேட்ட உடனேயே, மக்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் களவாடப்பட்டிருக்கிறது என்கிறார், முதல்வர் ஸ்டாலின்.
கடந்த நான்காண்டுகளாக, தி.மு.க., ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, தொழில் வரி, பதிவு கட்டணங்கள் என்று, அரசின் அனைத்து வரிகளும், கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், நடுத்தர மக்கள் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
இது பற்றி தினமும் கண்ணாடி முன் நின்று, நீங்கள் உங்கள் முகத்தை பார்க்கும்போது சிந்திக்கவில்லையா; உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளை குறைக்க வேண்டும் என தோன்றவில்லையா? தமிழக மக்களின் சந்தோஷங்களை எல்லாம் கொள்ளையடித்த ஒரு நபர், களவாடுவது பற்றி புலம்புவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.