கர்ப்பிணியர், குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டம் 500 இடங்களில் துவக்கம்
கர்ப்பிணியர், குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டம் 500 இடங்களில் துவக்கம்
கர்ப்பிணியர், குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டம் 500 இடங்களில் துவக்கம்
ADDED : மே 15, 2025 01:02 AM

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களில், ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை, தி.நகர் நகர்ப்புற சுகாதார நலவாழ்வு மையத்தில் நடந்த நிகழ்வில், ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று துவக்கி வைத்தார்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
மாநகராட்சிகள், நகராட்சிகளில் உள்ள, 708 நகர்ப்புற சுகாதார நலவாழ்வு மையங்களில், ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முதல் கட்டமாக, 500 நலவாழ்வு மையங்களில், கர்ப்பிணியருக்கு, 12 வகையான தடுப்பூசிகளும், குழந்தைகளுக்கு, 11 வகையான தடுப்பூசிகளும் செலுத்தப்பட உள்ளன.
இந்த தடுப்பூசிகளால், காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, இன்ப்ளூயன்ஸா - நிமோனியா, மெனிஞ்ஜிடிஸ், ரணஜன்னி, போலியோ, தட்டம்மை - ரூபெல்லா, ரோட்டா வைரஸ், நியுமோகோக்கல் நிமோனியா, ஜப்பானிய மூளை காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை தடுக்க முடியும்.
இந்தியாவில் ஆண் டுக்கு, 12 லட்சம் குழந்தைகள் பல்வேறு விதமான நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
அதில், 15.9 சதவீத இறப்புகள், நிமோனியா தொற்றால் ஏற்படுகின்றன. இதை தடுக்கும் வகையில், 2021ல் இருந்து தேசிய தடுப்பூசி திட்டத்தில், நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில், 9.27 லட்சம் குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.