நீதிமன்றங்களுக்கான விடுமுறை நாட்கள் தற்போதைய நிலையே தொடர வலியுறுத்தல்
நீதிமன்றங்களுக்கான விடுமுறை நாட்கள் தற்போதைய நிலையே தொடர வலியுறுத்தல்
நீதிமன்றங்களுக்கான விடுமுறை நாட்கள் தற்போதைய நிலையே தொடர வலியுறுத்தல்
ADDED : பிப் 10, 2024 06:25 PM
சென்னை:'நீதிமன்றங்களுக்கான விடுமுறை நாட்களை குறைக்க கூடாது; தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும்' என, சென்னை பார் அசோசியேஷன் உறுப்பினர்களில், பெரும்பான்மையோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கீழமை நீதிமன்றங்களில், 4.47 கோடி; உயர் நீதிமன்றங்களில், 62 லட்சம்; உச்ச நீதிமன்றத்தில், 80,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றால், காலியிடங்களை நிரப்ப வேண்டும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், விடுமுறை நாட்களையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது.
உயர் நீதிமன்றங்கள் சராசரியாக, 210 நாட்கள் இயங்குகின்றன. விடுமுறையை பொறுத்தவரை, சனி, ஞாயிறு, பொது விடுமுறைகள் தவிர்த்து, 30 நாட்கள் கோடை விடுமுறை மற்றும் தசரா விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை என, தலா ஏழு நாட்கள்.
நீதிமன்றங்களுக்கான விடுமுறை தொடர்பாக, சட்டம் மற்றும் நீதித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவும் பரிந்துரை அளித்தது.
அதாவது, நீதிமன்றங்கள் ஆண்டு முழுதும் இயங்குவது தொடர்பாக பரிந்துரை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஜனவரி, 29ம் தேதி நடந்த தலைமை நீதிபதிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
நீதிமன்றங்களுக்கான விடுமுறை தொடர்பாக, வழக்கறிஞர் சங்கங்களின் கருத்துக்களும் கோரப்பட்டன. இதுகுறித்து, சென்னை பார் அசோசியேஷன் அவசர பொதுக்குழு சமீபத்தில் கூடி விவாதித்தது.
கூட்டத்தில் பங்கேற்ற, மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர், நீதிமன்றங்களுக்கான விடுமுறை நாட்களை குறைக்கக் கூடாது, தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
'பணி நேரத்தை, தினசரி அரை மணி நேரம் அதிகரிப்பதுடன், இரண்டு மாதங்களுக்கு ஒரு சனிக்கிழமை வீதம் பணிபுரிவது என்று கணக்கிட்டால், ஆண்டுக்கு பணி நாட்களை, 210ல் இருந்து 237 நாட்களாக அதிகரிக்கலாம்' என்றும் யோசனை தெரிவித்துள்ளனர்.