இன்ப்ளுயன்ஸா காய்ச்சல் மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு
இன்ப்ளுயன்ஸா காய்ச்சல் மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு
இன்ப்ளுயன்ஸா காய்ச்சல் மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு
ADDED : செப் 23, 2025 05:56 AM

அரசு மருத்துவமனைகளில், இன்ப்ளுயன்ஸா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், 'ஓசெல்டமிவிர்' மற்றும் உடலில் யூரிக் அமிலத்தை குறைக்க பயன்படுத்தப்படும், 'அலோபுரினோல்' உள்ளிட்ட மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில், மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அத்துடன் தேவைக்கு ஏற்ப, நேரடியாக வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யும் வகையில், மருத்துவமனைகளுக்கு தனித் தனியாக நிதியும் ஒதுக்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் உள்ள பிரதான மருத்துவமனைகளான சென்னை ராஜிவ் காந்தி, ஸ்டான்லி, ஓமந்துாரார், கிண்டி உள்ளிட்ட மருத்துவமனைகளில், இதயம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைகளுக்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்து.
இங்கு டாக்டர்கள் பரிந்துரை செய்யும் மருந்து, மாத்திரைகளை, பெரும்பாலும் வெளியில் உள்ள மருந்தகங்களில் தான் வாங்க வேண்டியுள்ளது. குறிப்பாக, 'அட்டோர்வாஸ்டாடின், நோடோசிஸ், டாம்சுலோசின்' உள்ளிட்ட மாத்திரைகள், அரசு மருத்துவமனைகளின் மருந்தகங்களில் கிடைப்பதில்லை.
அதேபோல, 'இன்ப்ளுயன்ஸா' காய்ச்சல் பாதிப்புக்கு பயன்படுத்தப்படும், 'ஓசெல்டமிவிர்' மாத்திரை, யூரிக் அமிலம் மற்றும் சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும், 'அலோபுரினோல்' உள்ளிட்ட மாத்திரைகளும் தரப்படுவதில்லை.
டாக்டர்கள் பரிந்துரை செய்தாலும், அரசு மருந்தகங்களில் மருந்துகள் கிடைக்காததால், தனியார் மருந்தகங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவிட்டு, மருந்துகளை வாங்க வேண்டிஉள்ளது.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
இதயம், புற்றுநோய், நரம்பியல், சிறுநீரக பிரச்னை சார்ந்த நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். ஒரு சில மருந்துகள், இரண்டு விதமான நோய்களுக்கு தீர்வு அளிக்கும் மூலப்பொருட்களை கொண்டுள்ளன. அதனால், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் சார்பில் கிடைக்கும் மருந்துகள் விரைவாக காலியாகி விடுகின்றன.
அரசு மருத்துவமனைகளுக்கான நிதியும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, 300 நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வழங்க வேண்டுமென்றால், 100 பேருக்கான நிதியே தரப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக அதிகாரிகள் கூறுகையில், 'மருந்துகள் கொள்முதல் செய்வதில் எவ்வித பிரச்னையும் இல்லை. மருத்துவ கல்லுாரிகளுக்கு நிதி கிடைப்பதில் பிரச்னை இருக்கலாம்' என்றனர்.
- நமது நிருபர் -