ADDED : ஜன 13, 2024 12:36 AM
சென்னை:வடகிழக்கு பருவமழை விலகவுள்ள நிலையில், பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில், லேசான மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது.
பெரும்பாலான மாவட்டங்களில் மழை ஓய்ந்து விட்டதால், நேற்று முதல் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிகாலையும், இரவும் பனி மூட்டம் நீடிக்கிறது. காலை நேர வெப்பநிலை, மாநிலத்தில் குறைந்தபட்சமாக ஊட்டியில், 9 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியுள்ளது.
சென்னையில் பகலில் வானம் மேகமூட்டமாகவும், இரவும், அதிகாலையும் பனி மூட்டமாகவும் காணப்படும். அதிகபட்சம், 31 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது.
அதனால், தென் மாவட்டங்களில், இன்று சில இடங்களில் லேசான மழை பெய்யும். அரபிக்கடலின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
எனவே, மீனவர்கள் இன்று மேற்கண்ட பகுதிக்கு செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.