Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு ரூ.2,465 கோடியில் 96 திட்ட பணிகளும் துவக்கம்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு ரூ.2,465 கோடியில் 96 திட்ட பணிகளும் துவக்கம்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு ரூ.2,465 கோடியில் 96 திட்ட பணிகளும் துவக்கம்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு ரூ.2,465 கோடியில் 96 திட்ட பணிகளும் துவக்கம்

ADDED : பிப் 25, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில், 1,517 கோடி ரூபாயில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

அத்துடன், 948.18 கோடி ரூபாயில் முடிவடைந்த 95 திட்டப் பணிகளையும் துவக்கி வைத்தார்.

நெம்மேலி நிலையத்திலிருந்து பெறப்படும்சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, பொது மக்களுக்கு வினியோகம் செய்வதற்காக, 48.10 கி.மீ., நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகளும், சோழிங்கநல்லுாரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன.

9 லட்சம் மக்கள்


இங்கிருந்து வழங்கப்படும் குடிநீர் வாயிலாக வேளச்சேரி, ஆலந்துார், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லுார், உள்ளகரம் - புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பல்லாவரம், பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவன பகுதிகள் என, ஒன்பது லட்சம் மக்கள் பயன் அடைவர்.

அத்துடன், சென்னை பெருநகர் குடிநீர் வாரியம் சார்பில், 129.50 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்ட, ஏழு திட்டப் பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, பெரம்பலுார், தேனி, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில், ஒரு நகராட்சி, இரண்டு பேரூராட்சிகள், 1,219 ஊரக குடியிருப்புகள் பயன் பெறும் வகையில், மூன்று தனி குடிநீர் திட்டங்கள், ஆறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள், தமிழக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 315.98 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி பயன் பெறும் வகையில், 217.13 கோடி ரூபாயில் இரண்டு பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன; இவற்றையும் முதல்வர் துவக்கிவைத்தார்.

அதேபோல், நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சார்பில், 172.34 கோடி ரூபாயிலான 52 பணிகள்; பேரூராட்சி இயக்ககம் சார்பில், 33.02 கோடி ரூபாய் செலவிலான 12 பணிகள்.

சென்னை மாநகராட்சி சார்பில், 70.79 கோடி ரூபாயில் நடந்த பணிகள் என, மொத்தம் 2,465 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டுள்ள 96 திட்டப் பணிகளை, முதல்வர் துவக்கி வைத்தார்.

அடிக்கல்


சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், பல ஆண்டுகளாக கொட்டப்பட்டுள்ள குப்பையை, 648.38 கோடி ரூபாய் செலவில் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் பிரித்தெடுத்து, நிலத்தை மீட்டெடுக்கும் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இதேபோல, சென்னை குடிநீர் வாரியம் சார்பில், 101.26 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள மூன்று புதிய திட்டங்கள்; நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சார்பில், 813.85 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ள 23 திட்டப் பணிகள்.

பேரூராட்சிகள் இயக்ககம் சார்பில், 238.93 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் என, மொத்தம் 1,802.36 கோடி ரூபாய் மதிப்பில், 39 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின்அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, வேலு,அன்பரசன், சென்னை மேயர் பிரியா பங்கேற்றனர்.

'திட்டங்களை நிறைவேற்றும் அரசு!'


இந்நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:தமிழகம் அதிகப்படியான நகரமயமாக்கல் உடைய மாநிலம். அதனால் தான், நகராட்சி நிர்வாகத்தை மட்டும் தனியாக கவனிக்க, ஒரு அமைச்சர் வேண்டும். அதுவும் துடிப்பாகச் செயல்படுகிற அமைச்சர் வேண்டும் என தேர்ந்தெடுத்து, அதை நேருவிடம் ஒப்படைத்தேன்.நகர்ப்புற மக்களுடைய அவசிய தேவைகளான கல்வி, மருத்துவம், குடிநீர், சாலைகள் போன்றவற்றை முறையாக, சரியாக நம் அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.
நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு, 2010ம் ஆண்டு அடிக்கல்நாட்டினேன். இந்நிலையம் சார்பில், தென் சென்னையில் வசிக்கிற ஒன்பது லட்சம் மக்கள் பயனடைகின்றனர். பேரூரில் இது மாதிரியான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆக., 21ல் அடிக்கல்நாட்டினேன். இந்நிலையம், தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமைய உள்ளது. இந்நிலையத்தை அமைக்கும் பணிகள், நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு நிச்சயமாக உறுதியாக கொண்டு வரப்படும்.சென்னை மக்களுடைய குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நம் திராவிட மாடல் அரசை பொறுத்தவரை, வெற்று அறிவிப்புகள் வெளியிடுகிற அரசு கிடையாது; திட்டங்களை நிறைவேற்றி, சென்னையின் தாகத்தை தீர்க்கிற அரசு.சென்னை மாநகராட்சி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு, 'கலைஞர் நுாற்றாண்டு விழா கட்டடம்' என பெயர் சூட்டப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.



364 வாகனங்கள்!


சென்னை மாநகராட்சிக்கு, நாய்களை பிடித்து கருத்தடை செய்து, ரேபிஸ் நோய் தடுப்பூசி போட ஆறு வாகனங்கள்; ஐந்து கால்நடை பிடிக்கும் வாகனங்கள்; மூன்று மரக்கிளை நீக்கும் இயந்திரங்கள்; வீடு வீடாகச் சென்று தரம் பிரிக்கப்பட்ட குப்பை சேகரிக்கும் பணிக்காக, 'லித்தியம் அயன் பேட்டரி'யில் இயங்கும் 350 மூன்று சக்கர வாகனங்களையும் நேற்று முதல்வர் வழங்கினார். இவ்வாகனங்கள் 9.56 கோடி ரூபாயில் வாங்கப்பட்டுள்ளன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us