'டாஸ்மாக்' மதுக்கடைகளில் ஊழியர்கள் ஆள்மாறாட்டம்
'டாஸ்மாக்' மதுக்கடைகளில் ஊழியர்கள் ஆள்மாறாட்டம்
'டாஸ்மாக்' மதுக்கடைகளில் ஊழியர்கள் ஆள்மாறாட்டம்
ADDED : ஜன 28, 2024 01:28 AM
சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,820 மதுக்கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. அவற்றில் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என, 25,000 பேர் பணிபுரிகின்றனர்.
அவர்களில் பலர், 'குடி'மகன்களிடம் இருந்து பாட்டிலுக்கு, அரசு நிர்ணயம் செய்திருப்பதை விட, கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர்.
சில ஊழியர்கள், மதுக்கடைக்கு தினமும் சரியான நேரத்தில் ஒழுங்காக வேலைக்கு வருவதில்லை. அவர்கள், நண்பர்கள், வேண்டிய சிலரை கடையில் நியமித்து விட்டு, தங்களின் பணிகளை செய்ய வைக்கின்றனர்.
இதற்காக தினமும் ஒருவருக்கு, 500 ரூபாய் வரை ஊதியம் வழங்குவதாக தெரிகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் இந்த முறைகேடுகள் அதிகம் நடப்பதாக புகார்கள் சென்றுள்ளன.
இதுகுறித்து, 'குடி'மகன்கள் கூறியதாவது:
மதுக்கடைகளில் பாட்டிலுக்கு அதிக விலை விற்பது தொடர்பாக, மாவட்ட மேலாளர்களிடம் புகார் அளிக்கப்படுகிறது. அவர்கள், சம்பந்தப்பட்ட கடையில் விசாரணை மேற்கொள்கின்றனர். ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை.
புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக கேட்கப்பட்ட போது, 'நீங்கள் புகார் தெரிவித்த நபர் யாரும், கடையில் பணிபுரியவில்லை' என்று பதில் தருகின்றனர்.
இது தொடர்பாக தீவிரமாக விசாரித்தபோது தான், ஊழியர்கள், தங்களுக்கு பதிலாக வேறு நபர்களை வேலைக்கு நியமித்திருப்பது தெரியவந்தது. மேற்பார்வையாளர்கள் கடையில் இருப்பதில்லை. இது தொடர்பாக, உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.