சட்ட விரோத பண பரிமாற்றம் தனியார் நிறுவனங்களில் 'ரெய்டு'
சட்ட விரோத பண பரிமாற்றம் தனியார் நிறுவனங்களில் 'ரெய்டு'
சட்ட விரோத பண பரிமாற்றம் தனியார் நிறுவனங்களில் 'ரெய்டு'
ADDED : பிப் 24, 2024 12:59 AM
சென்னை:சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சென்னையில், தனியார் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகம் என, 10 இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மும்பையை தலைமையிடமாக வைத்து, இன்டர்நேஷனல் டிரேடு லிங்க்ஸ் எனும் நிறுவனம் செயல்படுகிறது. இதன் கிளை அலுவலகங்கள், டில்லி, ஆந்திரா, தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் செயல்படுகின்றன.
பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் வெளிநாடுகளுக்கு வேலைக்காக ஆட்களை அனுப்புவது, திட்ட அறிக்கைகள் தயாரித்து தருவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.
இதன் வாயிலாக, இன்டர்நேஷனல் டிரேடு லிங்க்ஸ் நிறுவனம், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில், எழும்பூர் நீதிமன்றம் எதிரே, அந்த நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை, 10:00 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை பெரம்பூர் அடுத்த திரு.வி.க., நகர், காமராஜர் நகர், 1வது தெருவை சேர்ந்தவர் டேனியல் செல்வகுமார், 35; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர் வீட்டில், ஒரு பெண் உட்பட ஆறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்டர்நேஷனல் டிரேடு லிங்க்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய நபர்களின் வீடுகள் என, 10 இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை பழவந்தாங்கல், வீரமாமுனிவர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், பழவந்தாங்கல், பூந்தோட்டம் தெருவைச் சேர்ந்த ஹெலன் சாமுவேல் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
வெங்கடேசன் தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஹெலன் சாமுவேல் சுயதொழில் செய்கிறார்.