பாம்பன் கடலில் துார்வார ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு
பாம்பன் கடலில் துார்வார ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு
பாம்பன் கடலில் துார்வார ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு
ADDED : மார் 28, 2025 04:30 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தை, கனரக சரக்கு கப்பல்கள் கடந்து செல்ல, கடலில் கால்வாயை துார்வாரி அகலப்படுத்த சென்னை ஐ.ஐ.டி., குழு ஆய்வு செய்தது.
பாம்பன் கடலில், 1914ல் ரயில் பாலம் அமைத்ததும் துாக்கு பாலம் வழியாக சரக்கு கப்பல்கள் கடந்து செல்ல, 3 கி.மீ.,க்கு கால்வாய் அமைத்தனர். பல ஆண்டுகளுக்கு முன் இக்கால்வாயை அமைத்ததால், நீரோட்ட மாறுபாட்டில் கால்வாயின் ஆழம், அகலம் குறைந்தது. வழக்கமாக பாம்பன் கடலில் அடிப்பகுதி, 2 மீட்டர் ஆழத்திற்கும் குறைவாக செல்லும் கப்பல்களை மட்டுமே அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில், 2 மீ.,க்கு மேல் ஆழத்தில் செல்லக்கூடிய கனரக சரக்கு, பாதுகாப்பு படை கப்பல்கள், மீன்பிடி படகுகள் கடந்து செல்ல ஏதுவாக, இக்கால்வாயை துார்வார தமிழக கடல்சார் வாரியம் முடிவு செய்தது. இதற்காக கடலில் மண் பரிசோதனை செய்ய, சென்னை ஐ.ஐ.டி.,யை கேட்டுக் கொண்டது.
நேற்று பாம்பன் கடலில் புதிய ரயில் துாக்கு பாலம் அருகில், ஐ.ஐ.டி., பொறியாளர்கள் குழு கடலில் இரும்பு மேடை அமைத்து, 20 மீ., ஆழத்திற்கு துளையிட்டு பரிசோதனைக்கு மண்ணை சேகரித்து வருகின்றனர். இதை சென்னையில் ஆய்வு செய்த பின், ஆய்வறிக்கையை கடல்சார் வாரியத்திற்கு அனுப்புவோம் என, ஐ.ஐ.டி., பொறியாளர்கள் தெரிவித்தனர்.