தெற்காசியாவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவேன் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
தெற்காசியாவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவேன் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
தெற்காசியாவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவேன் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
ADDED : செப் 15, 2025 02:00 AM

கிருஷ்ணகிரி:''தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி காட்டுவேன்,'' என, கிருஷ்ணகிரியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்தார்.
கிருஷ்ணகிரி ஆண் கள் கலைக்கல்லுாரியில் நேற்று நடந்த விழாவில், 270.75 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு துறைகளில் 193 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார் .
மேலும், 562.14 கோடி ரூபாய் மதிப்பிலான 1,114 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
முன்னோடி
தொடர்ந்து, 77,002 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசியதாவது:
ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை வைக்க முடியாமல், வயிற்றெரிச்சல் காரணமாக, தி.மு.க., தன் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என, எதிர்க்கட்சிகள் பொத்தாம் பொதுவாக கூறி வருகின்றன.
தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகள் அல்லாமல், பல்வேறு திட்டங்களும் நிறைவேற்றப் பட்டுள்ளன.
பல திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக உள்ளன என, பல்வேறு பத்திரிகைகள் கட்டுரைகள் வெளியிடுகின்றன.
வடமாநில, 'யு டியூப்' சேனல்கள் கூட, தி.மு.க., அரசை பற்றி, அம்மாநில மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் தெரிந்தும், எதிர்க்கட்சிகள் மறைக்க விரும்புகின்றன.
தி.மு.க., அளித்த, 505 வாக்குறுதிகளில், 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 அறிவிப்புகள் மத்திய அரசின் பரிசீலனையிலும், 64 திட்டங்களுக்கு போதிய நிதி இல்லை என்றும் அமைச்சர்கள் விளக்கி உள்ளனர்.
'நீட்' தேர்வு விலக்கை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை; அதை நாங்கள் மறுக்கவில்லை; சட்டம் இயற்றி தீர்மானம் அனுப்பி வைத்தோம். கவர்னர் மூலம் முட்டுக்கட்டை போட்டனர். சட்டப் போராட்டம் நடத்தினோம்.
மத்தியில் நம் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்த்தோம். தமிழகமும், 40க்கு 40 வெற்றியை கொடுத்தாலும், மத்தியில் பா.ஜ., அரசு வெற்றி பெற்றது.
கையெழுத்து
அதுவும் மைனாரிட்டி அரசாக உள்ளது. நாட்டு மக்களுக்கு எதிரான ஆட்சி நீடிக்காது. மாநில உரிமைகளை காக்கும் ஆட்சி விரைவில் அமையும். என் வெளிநாட்டு பயணத்தை பழனி சாமி விமர்சிக்கிறார். அவரும் வெளிநாடு சென்றார்; அவர் சென்று வந்து அறிவித்ததில், கால்வாசி திட்டங்கள் கூட வரவில்லை.
ஆனால், நான் போட்ட ஒப்பந்தத்தில், 77 சதவீத நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. மற்ற நிறுவனங்களும் வரும். தமிழகத்தை இந்திய அளவில் அல்ல, தெற்காசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக உருவாக்கி காட்டுவேன். இது என்னுடைய உறுதி.
வரும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம்; அடுத்தும் தி.மு.க., ஆட்சி தான். தி.மு.க.,வின் மக்களாட்சி காலமெல்லாம் தொடரும். தமிழகம் மேலும் வளரும் .
இவ்வாறு முதல்வர் பேசினார்.
அத்துடன், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கென ஐந்து புதிய திட்டங்களையும் முதல்வர் அறிவித்தார்.