Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/குடும்ப பிரச்னையால் தவறு செய்துவிட்டேன்; போலீஸ் விசாரணையில் ஸ்ரீகாந்த் கண்ணீர்

குடும்ப பிரச்னையால் தவறு செய்துவிட்டேன்; போலீஸ் விசாரணையில் ஸ்ரீகாந்த் கண்ணீர்

குடும்ப பிரச்னையால் தவறு செய்துவிட்டேன்; போலீஸ் விசாரணையில் ஸ்ரீகாந்த் கண்ணீர்

குடும்ப பிரச்னையால் தவறு செய்துவிட்டேன்; போலீஸ் விசாரணையில் ஸ்ரீகாந்த் கண்ணீர்

ADDED : ஜூன் 25, 2025 08:13 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'நான் தவறு செய்து விட்டேன்; போதைப்பொருள் வாங்கி யாரிடமும் விற்கவில்லை' என, கைதான நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போதைப்பொருளான கோகைன் பயன்படுத்தியது மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக, நடிகர் ஸ்ரீகாந்த், 46, கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தவறான நடத்தை

போலீசாரிடம் ஸ்ரீகாந்த் அளித்துள்ள வாக்குமூலம்: என் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் திருப்பதி. அதே ஊரில் என் தந்தை வங்கி அதிகாரியாக இருந்தார். என் தாய், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். நான் எம்.சி.ஏ., படித்துள்ளேன்.

பார்த்திபன் கனவு, ரோஜா கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். எதிர்பார்த்த அளவுக்கு வணிக ரீதியாக என் படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால், ஓரங்கட்டப்பட்ட கதாநாயகன் பட்டியலில் இருந்தேன். எனக்கு பெண்கள் சகவாசம் அதிகம். திருமணத்திற்கு முன் நடிகை ஒருவருடன் நெருங்கிய நட்பில் இருந்தேன். அவருடன், நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்ற போது, வந்தனா என்பவர் அறிமுகமானார்.

பெரும் சர்ச்சைகளுக்கு பின், அவரை, 2007ல் காதல் திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். எங்களின் மண வாழ்க்கை சரியாக அமையவில்லை. என் தவறான நடத்தை காரணமாக, சென்னை திருவான்மியூரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தனா அடிக்கடி சென்று விடுவார்.

தற்போதும் நாங்கள் பிரிந்து தான் வாழ்கிறோம். மகள் வந்தனாவுடனும், மகன் என்னுடனும் இருக்கின்றனர். நடிகர், நடிகையர் நடத்தும் இரவு பார்ட்டிகளில் பங்கேற்ற போது, கோகைன் பழக்கம் ஏற்பட்டது. அதற்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். கோகைன் விற்பனை செய்வோரை தேடிப்போய் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

இந்த போதை காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன் ஹோட்டல் ஒன்றில் தகராறும் ஏற்பட்டது. படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தபோது தான், நடிகை ஒருவர் வாயிலாக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பிரசாத் என்பவரின் பழக்கம் ஏற்பட்டது.

கோகைன்

தீங்கிரை என்ற படத்தை தயாரித்த அவர், கோகைன் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பிரசாத்திடம் இருந்து, 5 லட்சம் ரூபாய் வரைக்கும், கோகைன் வாங்கி பயன்படுத்தி வந்தேன்.

படத்தில் நடிப்பதற்காக, 10 லட்சம் ரூபாய், பிரசாத் தர வேண்டி இருந்தது. இந்த தொகைக்கு பதிலாக, கோகைன் தருவதாக கூறினார்.

கடைசியாக அவரிடம், 250 கிராம் வாங்கி பயன்படுத்தினேன். குடும்ப பிரச்னை காரணமாக போதைக்கு அடிமையாகி, தவறு செய்து விட்டேன். நான் கோகைன் வாங்கி மற்ற நடிகர், நடிகையருக்கோ, வேறு நபர்களுக்கோ விற்பனை செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நீதிபதியிடம் கெஞ்சல்

ஸ்ரீகாந்தை கைது செய்து, நேற்று முன்தினம் இரவு, எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ஸ்ரீகாந்த், 'நான் குடும்ப பிரச்னை காரணமாக, கோகைன் வாங்கி பயன்படுத்தி தவறு செய்து விட்டேன். என் மகனுக்கு உடல்நிலை சரியில்லை.
எனக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்று, கெஞ்சினார். அதற்கு நீதிபதி, 'போதை பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தான் ஜாமின் பெற பெற முடியும்' என்று கூறியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us