Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை ஆய்வு செய்து 3டி தொழில்நுட்பத்தில் மனித முகங்கள் வடிவமைப்பு

கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை ஆய்வு செய்து 3டி தொழில்நுட்பத்தில் மனித முகங்கள் வடிவமைப்பு

கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை ஆய்வு செய்து 3டி தொழில்நுட்பத்தில் மனித முகங்கள் வடிவமைப்பு

கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை ஆய்வு செய்து 3டி தொழில்நுட்பத்தில் மனித முகங்கள் வடிவமைப்பு

ADDED : ஜூலை 04, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
மதுரை:தமிழர்கள் தொன்மையை உலகிற்கு பறைசாற்றும், சிவகங்கை மாவட்டம் கீழடியில், 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இரண்டு மனிதர்களின் மண்டை ஓடுகளை, மதுரை காமராஜர், இங்கிலாந்து பல்கலைகள் இணைந்து ஆய்வு செய்து, 3டி தொழில்நுட்பத்தில் அவர்களின் முக தோற்றங்களை வடிவமைத்து வெளியிட்டுள்ளன.

விலங்கு எலும்புகள், தானியங்கள் குறித்த டி.என்.ஏ., ஆய்வும் துவங்கியுள்ளது.

'பேஸ் லேப்' உதவி


கீழடி அகழாய்வில் இதுவரை, 18,000க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்து உள்ளன.

பானை ஓடுகள், அணிகலன்கள், சுடுமண் முத்திரை கட்டைகள், எழுத்தாணிகள், அம்புகள், இரும்பு, செம்பு ஆயுதங்கள், மனித மண்டை ஓடுகள், விலங்குகளின் எலும்புகள், தானியங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

இங்கு நடக்கும் அகழாய்வுகள் தொடர்ச்சியாக, கீழடியில் இருந்து, 800 மீட்டர் தொலைவில் கொந்தகை ஈமச்சடங்கு மையத்தில் இருந்து இரண்டு மண்டை ஓடுகள் எடுக்கப்பட்டு, இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலையின், 'பேஸ் லேப்' உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த மண்டை ஓடுகளுக்கான முகதோற்றங்கள், 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த முக அமைப்புகள், தென்னிந்திய அம்சங்களை கொண்டுள்ளன. மேற்கு ஐரேஷிய எனப்படும் ஈரானிய வேட்டைக்காரர்கள், ஆஸ்ட்ரோ - ஆசிய மக்களின் மரபணு தடயங்களும் இதில் காணப்படுகின்றன.

80:20


முகத்தில் கீழ் பாதி தோராயமாக மதிப்பிடப்பட்டாலும், மேல் பாதியின் வடிவமைப்பு மிக துல்லியமாக உள்ளது. இதையடுத்து, மரபணு முறையில் மூதாதையர்களை துல்லியமாக கண்டறியும், டி.என்.ஏ., ஆய்வுகளும் துவங்கியுள்ளன.

மதுரை காமராஜ் பல்கலை மரபியல் துறை பேராசிரியர் குமரேசன் கூறியதாவது:

இந்த கண்டுபிடிப்பு, 80 சதவீதம் அறிவியல், 20 சதவீதம் கலை அடிப்படையில் நடந்துள்ளது.

வடிவமைக்கப்பட்ட முகங்கள், டி.என்.ஏ., தரவுகளுடன் இணைந்து சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் மூதாதையர்களை கண்டறிய உதவும்.

கீழடியில், 2,500 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களுடன் வாழ்ந்த விலங்குகள் குறித்தும் ஆய்வு நடக்கிறது. இதுதொடர்பாக, மாடு, ஒருவகை மான் உட்பட விலங்குகளின் பல், காது எலும்பு என, 30 'சாம்பிள்கள்' சேகரிக்கப்பட்டு, அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலை மரபியல் துறையுடன் இணைந்து பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

கீழடி பகுதியில் அரிசி, திணை போன்ற தானியங்கள் குறித்த டி.என்.ஏ., ஆய்வும் நடக்கிறது. கொந்தகையில் அகழாய்வு செய்யப்பட்ட தாழிகளின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்த பின், பெரும்பாலான எலும்புக்கூடு எச்சங்கள், 50 வயதுடையவர்களுடையது என, ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

பல் தேய்வு முறைகள், எலும்பின் பொதுவான அளவு போன்ற பல அளவுகோல்கள் மூலம் வயது குறித்து அறிய முடியும். இந்த ஆய்வில் 3டியில் முகங்கள் அமைப்பு ஆய்வு ஒரு மைல் கல். விலங்குகள் எலும்புகள் மீதான மரபணு ஆய்வுகள் இன்னும் ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us