'சர்வீஸ் அபார்ட்மென்ட்' கட்ட வீட்டு வசதி வாரியம் திட்டம்
'சர்வீஸ் அபார்ட்மென்ட்' கட்ட வீட்டு வசதி வாரியம் திட்டம்
'சர்வீஸ் அபார்ட்மென்ட்' கட்ட வீட்டு வசதி வாரியம் திட்டம்
ADDED : ஜூன் 14, 2024 05:13 AM

சென்னை: தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில், வீட்டுவசதி வாரியம் சார்பில், 'சர்வீஸ் அபார்ட்மென்ட்' கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், வீடு போன்று அனைத்து வசதிகளுடன் இருக்கும் சர்வீஸ் அபார்ட்மென்ட்களை, மக்கள் ஆர்வத்துடன் பயன்படுத்துகின்றனர். சென்னை போன்ற நகரங்களில், இதற்கான சந்தை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
தமிழகத்தில் விற்பனைக்கான வீடுகள், மாத வாடகை அடிப்படையிலான வீடுகளையே வீட்டுவசதி வாரியம் கட்டி வருகிறது. இந்த வீடுகள், குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்நிலையில், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, குறுகிய கால வாடகைக்கு பயன்படுத்தும் வகையில், சர்வீஸ் அபார்ட்மென்ட் கட்டும் திட்டத்தை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்த உள்ளது.
முதற்கட்டமாக, வேலுார் மாவட்டம் சாத்துவாச்சாரி பகுதியில், சர்வீஸ் அபார்மென்ட் கட்டும் திட்டம், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு நிதி ஒதுக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் இதை செயல்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம். குறிப்பாக, சென்னையில் விற்பனையாகாமல் உள்ள வீடுகளை, சர்வீஸ் அபார்ட்மென்ட்களாக மாற்றலாமா என்றும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.