விழாக்களுக்கு கட்டுப்பாடு: ஹிந்து முன்னணி ஆதங்கம்
விழாக்களுக்கு கட்டுப்பாடு: ஹிந்து முன்னணி ஆதங்கம்
விழாக்களுக்கு கட்டுப்பாடு: ஹிந்து முன்னணி ஆதங்கம்
ADDED : ஜூன் 06, 2025 06:07 AM
திருப்பூர்: ''ஹிந்து விழாக்களுக்கு மட்டும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கும் தீர்ப்பை, கோர்ட் மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருவிழாக்களின் போது, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்ற கோர்ட் தீர்ப்பு அமலில் இருந்தது.
தற்போது, 14 மாவட்டங்களில் திருவிழாவின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்காக, ஏற்பாட்டாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 25,000 ரூபாய் செலுத்த வேண்டும்; இதன் வாயிலாக, அப்பகுதி நீர்நிலைகள் துார்வாரப்படும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், கடவுளை தரிசிக்க காசு வாங்குகின்றனர். கடவுளை காட்சிப் பொருளாக்கி, பக்தர்களை பொருளாதார தீண்டாமையை கடைப்பிடிக்க வைக்கின்றனர்.
நிகழ்ச்சி நடத்த பணம் செலுத்த வேண்டும் என்பது, ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையை முடக்கும் செயலாகும். ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில், பாரம்பரிய நாட்டுப்புற கலைகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தலாம்.
ஆபாசம் கூடாது என, சில கட்டுப்பாடுகளை விதிப்பதை வரவேற்கிறோம். 'பணம் செலுத்திவிட்டு, நடத்துங்கள்' என்பது, பக்தர்கள் மனதை காயப்படுத்தும் செயலாகும்.
அதென்னவோ தெரியவில்லை, ஹிந்து விழாக்களுக்கு மட்டும், தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்த தீர்ப்பை, கோர்ட் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.