3 மாதமாக சம்பளமின்றி தவிக்கும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் புதிய கோட்டங்கள் உருவானதால் தாமதம்
3 மாதமாக சம்பளமின்றி தவிக்கும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் புதிய கோட்டங்கள் உருவானதால் தாமதம்
3 மாதமாக சம்பளமின்றி தவிக்கும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் புதிய கோட்டங்கள் உருவானதால் தாமதம்
ADDED : ஜூலை 02, 2025 01:12 AM
மதுரை:நெடுஞ்சாலை துறையில் புதிய கோட்டங்கள் உருவானதால், அங்கு பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் மூன்று மாதங்களாக சம்பளம் பெற வழியின்றி தவிப்புடன் பணிபுரிகின்றனர்.
தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம், பராமரிப்பு பிரிவில் நிர்வாக வசதிக்காக புதிய வட்டங்கள், கோட்டங்கள், உட்கோட்டங்கள் என ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வட்டங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே இருந்த ஒன்பது வட்டங்களில் புதிதாக ஒரு வட்டமும், 45 கோட்டங்களில் இருந்து புதிதாக நான்கு கோட்டங்களும், 192 உட்கோட்டங்களில் இருந்து புதிதாக ஐந்து உட்கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இதேபோல நெடுஞ்சாலைத்துறையின் பிற பிரிவுகளான தரக்கட்டுப்பாடு, பாலங்கள் போன்றவற்றிலும் புதிய வட்டங்கள், கோட்டங்கள், உட்கோட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அலுவலகங்களுக்கு ஏற்கனவே பணியாற்றி வந்த பல கோட்டங்களில் இருந்து ஆட்களை கொண்டு வந்து மறுபணியமர்த்தம் செய்தனர்.
இதனடிப்படையில் ஏப்., 1 முதல் இந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களாக சம்பளம் வரவில்லை. அன்றாட குடும்பச் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பில் உள்ளனர்.
தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் கூட்டமைப்பினர் கூறுகையில், 'ஏற்கனவே பல ஆண்டுகளாக சம்பளம் பெற்று நிரந்தரப்பணியில் உள்ள ஊழியர்கள் புதிய கோட்டம், வட்டம் உருவானதையடுத்து பல பகுதிகளில் பரவலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
'இவர்களுக்கு சம்பள கணக்கு செயல்பாடுகளும் புதிய கோட்டம், வட்டம் என இடமாறுவதால் காலதாமதமாகிறது. மூன்று மாதம் வரை தீர்வு கிடைக்காததால் ஊழியர்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.
'கல்வி ஆண்டு துவக்கத்தில் குழந்தைகளின் கல்விச்செலவு, வீட்டுச்செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு மனு கொடுத்துள்ளோம். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.