தனிமையில் மனைவி ஆபாச படம் பார்ப்பது கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது ஐகோர்ட் அதிரடி
தனிமையில் மனைவி ஆபாச படம் பார்ப்பது கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது ஐகோர்ட் அதிரடி
தனிமையில் மனைவி ஆபாச படம் பார்ப்பது கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது ஐகோர்ட் அதிரடி
ADDED : மார் 21, 2025 12:49 AM

மதுரை: 'தனிமையில் மனைவி ஆபாச படம் பார்ப்பது, கணவரை கொடுமைப்படுத்துவதாக கருத முடியாது. விவாகரத்து கோர அது ஒரு காரணமாக அமையாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ஒரு ஆணும், பெண்ணும் கோவிலில் ஹிந்து முறைப்படி திருமணம் செய்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இருவரும் தனித்தனியாக வாழ்கின்றனர்.
இருவரையும் மீண்டும் சேர்ந்து வாழ அனுமதிக்க உத்தரவிடக்கோரி சம்பந்தப்பட்ட குடும்பநல நீதிமன்றத்தில் மனைவி மனுத்தாக்கல் செய்தார்.
ஆதார மற்றவை
விவாகரத்து அளிக்க உத்தரவிடக்கோரி, அதே நீதிமன்றத்தில் கணவர் மனு செய்தார். இதை அந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் கணவர் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அமர்வு அளித்த உத்தரவு:
மனைவி பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் அதிகமாக செலவு செய்வார். போனில் ஆபாச படம் பார்ப்பதில் அடிமையாக இருந்தார். அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபட்டார்.
வீட்டு வேலைகளை செய்ய மறுத்தார். மாமியாரை மோசமாக நடத்தினார். நீண்ட நேரம் போனில் பேசுவார். இப்படி தன்னை கொடுமைப்படுத்தினார் என, மனுதாரர் தரப்பு தெரிவித்தது.
மனைவி பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுவது கடுமையான களங்கத்தை ஏற்படுத்துகிறது. இக்குற்றச்சாட்டிற்கு ஆதாரம் தேவை.
திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். இக்கால கட்டத்தில், மனைவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதற்கான சாட்சிகளாக டாக்டர்கள் யாரும் விசாரிக்கப்படவில்லை. இக்குற்றச்சாட்டை நிரூபிக்க மனுதாரர் தவறிவிட்டார்.
மனைவியுடன் சேர்ந்திருந்த பிறகு, தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்ததாக மனுதாரர் கூறியுள்ளார். அதற்கான மருத்துவ அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டுகளால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுவதையும் நிரூபிக்க மனுதாரர் தவறிவிட்டார். ஆபாச படத்தை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமாகாது. சட்டத்தால் தடை செய்யப்பட்டதை பார்ப்பது தண்டனைக்குரிய செயலாகும்.
குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் பார்ப்பது குற்றம். எந்தவொரு போதையும் மோசமானது; ஆபாச பட போதையும் அது போன்றது தான். இது பார்வையாளரை பாதிக்கும்.
நியாயம் இல்லை
இது பெண்களை இழிவாக சித்தரிப்பதால், அதை தார்மீக ரீதியாக நியாயப்படுத்த முடியாது.
மனைவியின் செயல், சட்டத்திற்கு புறம்பாகாதவரை, இக்காரணத்திற்காக மனுதாரர் விவாகரத்து கோர முடியாது. மொபைல் போனில் தனியாக ஆபாச படம் பார்க்கும் மனைவியின் செயல் மனுதாரரை கொடுமைப்படுத்துவதாக இருக்காது. இது, அப்படத்தை பார்க்கும் மனைவியின் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
திருமணத்திற்கு பின், ஒரு பெண் வெளியே யாருடனாவது பாலியல் உறவு வைத்துக் கொண்டால், அது விவாகரத்திற்கான காரணமாக அமைகிறது.
மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுவது விவாகரத்திற்கான ஒரு காரணமாக இருக்க முடியாது. ஆண்களிடையே சுய இன்பம் உலகளாவியது என்று ஒப்புக் கொள்ளப்பட்டால், பெண்களின் சுய இன்பத்தை களங்கப்படுத்த முடியாது.
இவ்வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மனுதாரரின் மனைவி மறுத்துள்ளார்.
மனுதாரரின் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அவர்கள் இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்கிறோம். மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.