பொது நல வழக்கு தனி நலனிற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
பொது நல வழக்கு தனி நலனிற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
பொது நல வழக்கு தனி நலனிற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 11, 2025 02:25 AM
மதுரை: பொது நல வழக்கு தனிப்பட்ட நலனிற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோயில் கடைகள் ஏலத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சிங்கம்புணரியை சேர்ந்த செந்தில்வேல்ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோயிலுக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு நடத்த ஏல அறிவிப்பு வெளியானது. விதிகளை பின்பற்றவில்லை. ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுபோல் மடப்புரம் முருகன் சேர்வை மற்றொரு மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: செந்தில்வேல்ராஜா ஏலத்தில் பங்கேற்றார். அவரது மனு பொது நல வழக்கிற்குரிய தனித்தன்மையின் கீழ் வரவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பொது நல வழக்கு என்பது முக்கியமாக மக்கள் தொடர்பான பிரச்னைகளில் கவனம் செலுத்துகிறது.
ஒரு பொது நல வழக்கு தனிப்பட்ட நலனிற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளை தவறாக பயன்படுத்துவதை தடுத்தல், சிக்கல்கள், சமூக சமத்துவமின்மைக்கு தீர்வு காண முயல வேண்டும். ஒவ்வொரு சர்ச்சை அல்லது முறைகேட்டை பொது நல வழக்கு என்ற குடையின் கீழ் கொண்டுவர முடியாது. பொது நல வழக்கின் நோக்கத்தை விரிவுபடுத்த முடியாது.
மற்றொரு மனுதாரரான முருகன் சேர்வை ஏலத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. ஏல நடைமுறைகளில் பங்கேற்கவில்லை. அரசு தரப்பு, 'ஜன.22ல் ஏலம் நடந்தது. அதில் வெற்றி பெற்ற ஏலதாரர்கள் கடைகளை நடத்துகின்றனர்,' என தெரிவித்துள்ளது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.