போதை, சினிமாவால் சமூகம் சீரழிகிறது ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை
போதை, சினிமாவால் சமூகம் சீரழிகிறது ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை
போதை, சினிமாவால் சமூகம் சீரழிகிறது ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை
ADDED : ஜூலை 01, 2025 03:32 AM

மதுரை : 'போதை, சினிமாவால் சமூகம் சீரழிகிறது. கட்டுப்படுத்த வேண்டிய அரசு என்ன செய்கிறது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில், மதுரையைச் சேர்ந்த நிலையூர் மேகலா தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை வடிவேல்கரையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை நிலையூருக்கு மாற்றம் செய்ய உள்ளனர். அருகில் பள்ளி குடியிருப்புகள் அமைந்து உள்ளன.
மது அருந்துவோரால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். கடையை நிலையூருக்கு மாற்ற தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
ஒருபுறம் மருத்துவமனை களை துவக்கிவிட்டு, மக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளை துவக்குவது முரண்பாடாக உள்ளது.
மாநில அரசே டாஸ்மாக் வாயிலாக மதுபானங்களின் விற்பனையை மேலும் ஊக்கப்படுத்துகிறது. முன்பு, சினிமாக்களில் காதலுக்கு முக்கியத்துவம் இருந்தது. தற்போது போதைப்பொருள், வன்முறைக்கு முக்கியத்துவம் தரும் காட்சிகள் இடம்பெறுகின்றன. மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இவற்றால் சமூகம் சீரழிகிறது. கட்டுப்படுத்த வேண்டிய அரசு என்ன செய்கிறது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை நடக்கிறது. மக்களை பாதுகாக்க ஆன்லைன் விளையாட்டை முறைப்படுத்த சட்டம் கொண்டுவந்ததாக அரசு கூறுகிறது.
மறுபுறம் நாங்கள் யாரையும் மது அருந்துமாறு கூறவில்லை; ஊக்குவிக்கவில்லை எனக்கூறும் அரசு, டாஸ்மாக் கடைகளை ஏன் திறக்கிறது. இதனால் மக்கள் பாதிக்கின்றனர். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதுதான் அரசின் கடமை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதையடுத்து வழக்கின் விசாரணை, ஜூலை 7க்கு ஒத்திவைக்கப்பட்டது.