உள்ளாட்சி காலி இடங்களுக்கு தேர்தல் நடத்த ஐகோர்ட் தடை
உள்ளாட்சி காலி இடங்களுக்கு தேர்தல் நடத்த ஐகோர்ட் தடை
உள்ளாட்சி காலி இடங்களுக்கு தேர்தல் நடத்த ஐகோர்ட் தடை
ADDED : மே 22, 2025 12:48 AM

மதுரை:'தமிழகத்தில், ஒன்பது மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் காலி இடங்களுக்கு வார்டு மறுவரையறை முடியாமல், இட ஒதுக்கீடு இறுதி செய்யாமல் தேர்தல் நடத்தக்கூடாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
333 இடங்கள்
திருநெல்வேலி மாவட்டம், வெங்கடாச்சலபுரம் சண்முகநாதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில், 28 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2019ம் ஆண்டும், மற்றும் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்துார், வேலுார், விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021ம் ஆண்டும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தேர்தல் நடந்தது. தற்போது, செங்கல்பட்டு உட்பட ஒன்பது மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில், 333 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும்.
வார்டு மறுவரையறை
பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினர், பெண்களுக்கான இட ஒதுக்கீடு இறுதி செய்ய வேண்டும். போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்.
அதன் பின் காலி இடங்களுக்கு தேர்தல் நடத்துவது சரியாக இருக்கும். இல்லையெனில் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட இதர நடைமுறைகளை முடிக்காமல் தேர்தல் நடத்த முயற்சிக்கப்படுகிறது.
இடஒதுக்கீட்டை இறுதி செய்து, போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின், ஒன்பது மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் காலி இடங்களுக்கு தேர்தலை அறிவிக்க தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கேட்டிருந்தார். நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் விசாரித்தனர்.
''வார்டு மறுவரையறை முடியாமல், இட ஒதுக்கீட்டை இறுதி செய்யாமல் தேர்தலை நடத்தக்கூடாது” என தடை விதித்தனர். அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.