இடுகாட்டுக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ்? பாதைக்கு பட்டா கொடுத்தா இதுதான் நிலை!
இடுகாட்டுக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ்? பாதைக்கு பட்டா கொடுத்தா இதுதான் நிலை!
இடுகாட்டுக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ்? பாதைக்கு பட்டா கொடுத்தா இதுதான் நிலை!
ADDED : ஜூலை 01, 2025 06:59 AM

சென்னை: சென்னை மாநகராட்சி எல்லையில், வருவாய் துறை ஆவணங்களில் உள்ள இடுகாடு, பாதை, பொது வகைப்பாடு போன்ற நிலங்களில் வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
அதேபோல், மழைநீர் வடிகால்வாய்களில் கழிவுநீர் விட்டால், 10,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. 40க்கும் குறைவான கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
கூட்டம் துவங்கியதும், உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து பேசிய தி.மு.க., எம்.பி., - ஆ.ராஜாவை கண்டித்து, பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்த் பேச முயன்றார். ஆ.ராஜா பெயரை உச்சரித்ததும், அலறிய தி.மு.க., கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், 'கேள்வி நேரத்தில் பேசக்கூடாது; உங்களுக்கான நேரம் வரும்போது பேசுங்கள்' என, துணை மேயர் மகேஷ்குமார் கூறினார்.
மாநகராட்சி பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படும் என அறிவித்த திட்டம் என்னானது என, கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, மாநகராட்சி மேயர் பிரியா, ''சென்னை மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும், 6.50 கோடி ரூபாயில், 245 பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணிகள் துவங்கப்பட உள்ளன. அரசு கொண்டு வந்துள்ள, 'வாட்டர் பெல்' திட்டம், மாநகராட்சி பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்,'' என்றார்.
மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் பேசியதாவது: சென்னை மாநகராட்சியில், 10 இடங்களில் மட்டுமே வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற இடங்களிலும் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க வேண்டும். மாநகராட்சி சொந்தமான இடங்களை வணிக தளமாக மாற்றி, வருவாய் ஈட்டக்கூடிய பணிகளை மேற்கொள்ள குழு அமைக்க வேண்டும். மெரினாவை போல், பெசன்ட் நகர் கடற்கரையிலும் நீலக்கொடி சான்றிதழ் பெற்று, கடற்கரையை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சென்னை மாநகராட்சியில், வருவாய் துறை ஆவணங்களில் உள்ள பாதை, வண்டி பாதை, பாட்டை, களம், மயானம் - இடுகாடு, கார்ப்பரேஷன் பொது ஆகிய வகைப்பாடு நிலங்களில் வசிப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்க அனுமதி அளித்தல் உட்பட கூட்டத்தில், 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் முக்கிய தீர்மானங்கள்:
* சென்னை மாநகராட்சியில், 567 ஆசிரியர்கள் நியமிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
* வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான காந்திநகர் ராஜாஜி தெரு, சாலிகிராமம் பகுதியில் மாநகராட்சிக்கு சார்பில் கோசாலை அமைக்க அனுமதிக்கப்படுகிறது.
* மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, லுாப் சாலைக்கு பதிலாக, 125வது வார்டில் உள்ள டிமான்டி சாலைக்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் பெயர் சூட்டப்படும்.
* பேராயர் எஸ்றா சற்குணம் வசித்து வந்த கீழ்ப்பாக்கம் வாடல்ஸ் சாலை, தந்தை பேராயர் எஸ்றா சற்குணம் சாலை என மாற்றப்படும்.
* போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்கப்படும்.
* சென்னையில் முதற்கட்டமாக, 155 மயான பூமிகள் தனியார் வாயிலாக பராமரிக்க மாநகராட்சி அனுமதித்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.