ADDED : ஜன 28, 2024 01:40 AM

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில், சீதோஷ்ண நிலை மாறுபாடு காரணமாக, நவம்பரில் துவங்க வேண்டிய பனிக்காலம், டிசம்பரில் துவங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, குறைந்தபட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்சியசாக இருந்தது.
ஜனவரி துவக்கத்தில் இருந்து பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. 15ம் தேதிக்கு மேல் அதிகபட்சம் 22 டிகிரி, குறைந்த பட்சம், 3 டிகிரி செல்சியசாக இருந்தது. மூன்று நாட்களாக குறைந்தபட்ச வெப்பநிலை, 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் குளிர் நிலவுகிறது.
நேற்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை, 20 டிகிரி செல்சியசாக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை, 2 டிகிரி செல்சியசாக இருந்தது.
ஊட்டி ரேஸ் மைதானம், வெள்ளை கம்பளம் போர்த்தியதை போல காணப்பட்டது. உள்ளூர் மக்கள் காலையில் தீமூட்டி குளிர்காய்ந்த வண்ணம் இருந்தனர்.
புறநகர் பகுதிகளான, தலைகுந்தா, வேலிவியூ, லவ்டேல், அவலாஞ்சி உட்பட தாழ்வான இடங்களில், குறைந்த பட்ச வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியசாக இருந்தது.
'நெஸ்ட்' சுற்றுச்சூழல் அமைப்பின் நிர்வாகி சிவதாஸ் கூறுகையில், ''காலநிலை மாற்றம் காரணமாக, நீலகிரியில் கடந்த ஆண்டு பருவமழை குறித்த காலத்தில் பெய்யவில்லை. இதனால், விவசாயம் உட்பட மின் உற்பத்திக்கும் கூட போதிய நீர் கிடைக்கவில்லை.
மேலும், நவ., டிச., மாதம் நிலவ வேண்டிய பனியின் தாக்கம், ஜன., மாதம் நிலவுகிறது. இதனால், கோடைகால வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.