ஜி.எஸ்.டி., குறைப்பால் வீடு கட்டும் செலவு குறையும்: கட்டுமான துறையினர் தகவல்
ஜி.எஸ்.டி., குறைப்பால் வீடு கட்டும் செலவு குறையும்: கட்டுமான துறையினர் தகவல்
ஜி.எஸ்.டி., குறைப்பால் வீடு கட்டும் செலவு குறையும்: கட்டுமான துறையினர் தகவல்
ADDED : செப் 23, 2025 06:49 AM

சென்னை; 'சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி.,யில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் வீடுகளுக்கான கட்டுமான செலவு, 3 முதல் 5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது' என, கட்டுமான துறையினர் தெரிவித்துள்ளனர்.
கட்டுமான துறையில், சிமென்ட், செங்கல், டி.எம்.டி., கம்பி போன்றவற்றுக்கு, 18 முதல், 28 சதவீதம் வரை, ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்தப் பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்ட வீட்டை விற்கும் போது, அதன் மொத்த மதிப்பில், 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டது.
பல்வேறு அடுக்கு வரிகளால், கட்டுமான செலவு தொடர்ந்து உயர்ந்து வந்தது. இது, வீடு வாங்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, கூடுதல் சுமையாக இருந்தது. இந்நிலையில், ஜி.எஸ்.டி., விகிதத்தில், சில திருத்தங்களை மத்திய அரசு செய்தது. அந்த திருத்தங்கள் நேற்று அமலுக்கு வந்தன. இதனால், சில கட்டுமான பொருட்களின் விலை குறையத் துவங்கி உள்ளது. குறிப்பாக, சிமென்ட், செங்கல் போன்றவற்றின் விலை குறைந்துள்ளது.
எனவே, வீடுகளுக்கான கட்டுமான செலவும், 5 சதவீதம் வரை குறையும் என, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுநர்கள் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, சிமென்ட்டுக்கு, 28 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக குறைந்துள்ளது. அதனால், ஒரு மூட்டை சிமென்ட் விலையில், 40 ரூபாய் வரை குறைக்கப்படும் என, உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். செங்கலுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாகி உள்ளதால், அதன் விலையும் குறைக்கப்படுகிறது. சிமென்ட் விலை குறைப்பால், அதை வைத்து தயாரிக்கப்படும் பொருட்கள் விலை குறையுமா என்பது இனிமேல் தான் தெரியும்.
எரி சாம்பல் கற்கள், மார்பிள், கிரானைட் போன்றவற்றின் விலையும், படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, வீடுகளுக்கான கட்டுமான செலவு, 3 முதல் 5 சதவீதம் வரை குறையலாம். தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் வீடுகளுக்கான குறைந்தபட்ச கட்டுமான செலவு, 1 சதுர அடிக்கு, 2,500 ரூபாயாக உள்ளது. இது, குறையும் போது, அதன் பலன் வீடு வாங்கும் மக்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.