அரசு டாக்டர்கள் நடைபயணம்; அரசியல் தலைவர்கள் ஆதரவு
அரசு டாக்டர்கள் நடைபயணம்; அரசியல் தலைவர்கள் ஆதரவு
அரசு டாக்டர்கள் நடைபயணம்; அரசியல் தலைவர்கள் ஆதரவு
ADDED : ஜூன் 11, 2025 01:58 AM

சென்னை: ஊதிய உயர்வு கோரி நடைபயணத்தில் ஈடுபட உள்ள அரசு டாக்டர்களுக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அரசு டாக்டர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு டாக்டர்களின் சட்ட போராட்டக் குழுவினர், சேலம் மேட்டூரில் இருந்து சென்னை வரை, இன்று முதல் நடைபயணம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்திற்கு, நா.த.க., ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால், 10 லட்சம் ரூபாய் கொடுக்கும் தி.மு.க., அரசு, மக்களை காப்பாற்றும் பணியில் உள்ள டாக்டர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க மறுக்கிறது. அரசு டாக்டர்களுக்கு முறைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
மருத்துவமனைகளில் போதியளவு டாக்டர்கள், நர்ஸ் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு டாக்டர்கள் மேற்கொள்ளும் நடைபயணத்திற்கு, நா.த.க., தோள் கொடுத்து துணை நிற்கும்.
அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை, அவர்கள் எடுக்கும் முன்னெடுப்புகளுக்கும் ஆதரவாக இருப்போம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் அறிக்கை:
கொரோனா பேரிடர் காலத்தில், பணியாற்றி உயிரிழந்த, அரசு டாக்டரின் குடும்பத்திற்கு அளித்த வாக்குறுதியின்படி, அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, டாக்டர்கள், நர்சுகள் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
தமிழக அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக, வழங்கப்படாமல் இருக்கும், ஊதிய அமைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அரசு டாக்டர்கள் சேலம் மேட்டூரில் இருந்து சென்னை வரை, நடை பயண போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.
அரசு டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முழு ஆதரவு தெரிவிக்கிறது, தமிழக அரசு, உடனே போராட்டத்தில் ஈடுபட உள்ள, அரசு டாக்டர்களை அழைத்து பேச்சு நடத்தி, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், சுமூக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.