ராமதாஸ்- - அன்புமணி இடையே பிளவை உருவாக்குகிறார் ஜி.கே. மணி திலகபாமா பேசும் ஆடியோ வைரல்
ராமதாஸ்- - அன்புமணி இடையே பிளவை உருவாக்குகிறார் ஜி.கே. மணி திலகபாமா பேசும் ஆடியோ வைரல்
ராமதாஸ்- - அன்புமணி இடையே பிளவை உருவாக்குகிறார் ஜி.கே. மணி திலகபாமா பேசும் ஆடியோ வைரல்
ADDED : ஜூன் 01, 2025 01:43 AM
சிவகாசி: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைவராக இருந்த அன்புமணியின் பதவியை தானே எடுத்துக்கொண்டு, அவரை செயல் தலைவராக நியமிப்பதாக மே மாதம் அறிவித்தார்.
இதற்கு பொருளாளர் திலகபாமா, 'கட்சியில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டு உள்ளது. ராமதாஸ் முடிவு தவறு', என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதற்கு கட்சி பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், திலகபாமாவை நோய்க்கிருமி என கடுமையாக சாடினார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத திலகபாமா, அன்புமணி நடத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து திலகபாமாவை மாநில பொறுப்பில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்ட, சில நிமிடங்களிலேயே திலகபாமா பொருளாளராக தொடர்வதாக அன்புமணி அறிக்கை வெளியிட்டார்.
ஆடியோ வைரல்
இந்நிலையில் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே பிளவை உருவாக்கியது அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி என கட்சி நிர்வாகியிடம் திலகபாமா பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக்கிடம் திலகபாமா பேசும் அந்த ஆடியோவில் ''தலைவர் அன்புமணி சொன்னதை மீறி மாவட்ட செயலாளர் டேனியல் உடன் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றுள்ளீர்கள். மேலும் என்னை விஷக்கிருமி எனக் கூறிய பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் உடன் நின்று நீங்கள் அனைவரும் பேட்டி அளித்துள்ளீர்கள். மாவட்ட செயலாளர் என்னை பற்றி அவதுாறாக பேசி உள்ளார். அவர் இனி என் அலுவலகத்துக்கு வர முடியாது.உள்ளே நடக்கும் அரசியல் உங்களுக்கு தெரியாது.
ராமதாஸ், அன்புமணியை பிரித்து வைத்து கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்ய முயல்கிறார் ஜி.கே மணி. அதற்கு டேனியல் உடந்தை, என அந்த ஆடியோ பதிவு நீள்கிறது. கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்னை கடந்த சில நாட்களாக பூதாகரமாகி வரும் நிலையில் இந்த ஆடியோ பதிவு சர்ச்சையாகி உள்ளது.