Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ உயிரை பறித்த ஜெனரேட்டர் புகை? துாக்கத்தில் தந்தை, 2 மகன்கள் பலி

உயிரை பறித்த ஜெனரேட்டர் புகை? துாக்கத்தில் தந்தை, 2 மகன்கள் பலி

உயிரை பறித்த ஜெனரேட்டர் புகை? துாக்கத்தில் தந்தை, 2 மகன்கள் பலி

உயிரை பறித்த ஜெனரேட்டர் புகை? துாக்கத்தில் தந்தை, 2 மகன்கள் பலி

ADDED : ஜூலை 03, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
புழல்: புழலில், இரவில் மின் தடை ஏற்படவே வீட்டில் இருந்த சிறிய ஜெனரேட்டரை இயக்கி துாங்கிய தந்தை, இரண்டு மகன்கள் பரிதாபமாக உயிரிழந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 57; லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்கிறார். இவர், சென்னை புழல், பிரிட்டானியா நகர் 10வது தெருவில் தாய், மனைவி, மகள் மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அனைவரும் உணவருந்தி விட்டு, சுமன்ராஜ், 15, கோகுல்ராஜ், 13, ஆகிய, தன் இரண்டு மகன்களுடன் செல்வராஜ் ஒரு அறையிலும், அவரது மனைவி மாலா, தாய் மற்றும் மகள் மற்றொரு அறையிலும் படுத்திருந்தனர்.

நேற்று காலையில், பள்ளிக்கு செல்ல மகன்களை எழுப்புவதற்காக, மாலா சென்றுள்ளார். அப்போது, அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரம் கதவை தட்டியும் திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த மாலா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது, கணவர் மற்றும் மகன்கள் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்ததை கண்டு, அதிர்ச்சியில் உறைந்தார்.

தகவலறிந்த புழல் போலீசார், மூவரது உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு மின்சாரம் தடைபட்டதால், வீட்டில் இருந்த சிறிய ஜெனரேட்டரை இயக்கி வைத்துவிட்டு அனை வரும் துாங்கியுள்ளனர்.

ஜெனரேட்டரில் இருந்து அதிகபடியான கார்பன் வாயு, அறையில் சூழ்ந்த நிலையில், மூவரும் மூச்சுத்திணறி இறந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தந்தை, இரண்டு மகன்கள் உயிரிழந்த இந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விடுதியில் சூழ்ந்த புகை ஏழு பேர் 'அட்மிட்'

ஜி.எஸ்.டி., சாலையில் ஆலந்துார் அருகே, 'மெட்ரோ இன்' எனும் தங்கும் விடுதி இயங்குகிறது. அங்கு, நேற்று அதிகாலை மின் தடை ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டர் மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெனரேட்டர் பகுதியில் இருந்து வெளியான நெடியுடன் கூடிய புகை, விடுதி முழுதும் பரவியுள்ளது.இதில், அறையில் தங்கி இருந்த ஆறு பேர் மயக்கமடைந்தனர். வரவேற்பு பகுதியில் இருந்த விடுதி மேலாளரான வேளச்சேரியைச் சேர்ந்த பரத், 32, என்பவரும் மயக்கமடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், கிண்டி தீயணைப்பு நிலைய வீரர்களின் உதவியுடன் எட்டு பேரையும் மீட்டனர். இதில், கோவையைச் சேர்ந்த சுபாஷ், 46, என்பவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திருச்சியைச் சேர்ந்த சுரேஷ்குமார், 43, புதுக்கோட்டையைச் சேர்ந்த அஜித் அலாவுதீன், 41, திருச்சியைச் சேர்ந்த பிரசாந்த், 35, ஆகியோரை மணப்பாக்கம், மியாட் மருத்துவமனையிலும், கும்பகோணத்தைச் சேர்ந்த உமாபதி, 55, அன்பழகன், 65, மற்றும் பரத் ஆகியோர் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அனைவரும் சகஜநிலைக்கு திரும்பியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us