முன்னாள் அமைச்சர் உதயகுமார் அலுவலகம் முன் திடீர் குப்பைத்தொட்டி; வரியை வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை
முன்னாள் அமைச்சர் உதயகுமார் அலுவலகம் முன் திடீர் குப்பைத்தொட்டி; வரியை வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை
முன்னாள் அமைச்சர் உதயகுமார் அலுவலகம் முன் திடீர் குப்பைத்தொட்டி; வரியை வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை
ADDED : மார் 19, 2025 06:55 AM

மதுரை: மதுரையில் தனியார் வணிக வளாகத்தின் வரி நிலுவையை வசூலிக்கும் முயற்சியாக அங்கு செயல்படும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் அலுவலகம் முன் குப்பை தொட்டி வைத்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
இம்மாநகராட்சியில் தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகளில் ரூ. பல கோடி வரி நிலுவை உள்ளது. அதனை வசூலிக்க உதவி வருவாய் அலுவலர்களுக்கு கமிஷனர் சித்ரா இலக்கு நிர்ணயித்துள்ளார். அதிக வரி நிலுவை உள்ள நிறுவனங்கள், தனியார் கட்டடங்களில் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கே.கே.,நகர் வக்பு வாரிய கல்லுாரிக்கு எதிரே உள்ள ஒரு தனியார் காம்ப்ளக்ஸ் 2012 முதல் ரூ.9.13 லட்சம் வரி செலுத்தாமல் இருந்தது. மாநகராட்சி தரப்பில் பலமுறை வலியுறுத்தியும் வரி செலுத்தவில்லை. இதனால் பணியாளர்கள் காம்ப்ளக்ஸ் முன் குப்பை தொட்டி வைத்தனர்.
முன்னாள் அமைச்சர் உதயகுமார் அலுவலகம்
அந்த காம்ப்ளக்ஸ் தரைத்தளத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் அலுவலகம் பல ஆண்டுகளாக வாடகைக்கு செயல்படுகிறது. காம்ப்ளக்ஸ் பெயர் 'ஆர்.பி.,' என இருந்ததால் உதயகுமாருக்கு சொந்தமான அலுவலகம் முன் குப்பை தொட்டி வைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து சில மணிநேரத்தில் குப்பை தொட்டியை அலுவலர்கள் அகற்றினர்.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: டி.வி.பி.ராஜாவுக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் ரூ.9.13 லட்சம் பாக்கி வைத்துள்ளது. காம்ப்ளக்ஸ் முன் பகுதியில் வாடகை அலுவலகங்கள், பின் பகுதியிலும் அலுவலகங்கள், வீடும் உள்ளது. இதனால் மூன்று வரியாக கணக்கிட்டு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கடை, வீடு என இரண்டு வரியாக கணக்கிட வேண்டும் என உரிமையாளர் வலியுறுத்தி 2012 முதல் வரி செலுத்தவில்லை. நிலுவையை வசூலிக்க குப்பை தொட்டி வைக்கப்பட்டது என்றார்.