கள்ளச்சாராய சாவு பற்றி ‛கப்சிப்': திமுக கூட்டணி கட்சிகள் மீது இபிஎஸ் பாய்ச்சல்
கள்ளச்சாராய சாவு பற்றி ‛கப்சிப்': திமுக கூட்டணி கட்சிகள் மீது இபிஎஸ் பாய்ச்சல்
கள்ளச்சாராய சாவு பற்றி ‛கப்சிப்': திமுக கூட்டணி கட்சிகள் மீது இபிஎஸ் பாய்ச்சல்

கவலைக்கிடம்
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏ.,க்கள் வெளியேற்றப்பட்ட பிறகு இ.பி.எஸ்., நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்து உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. 96 பேர் சிகிச்சை பெறுகின்றனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர். பலருக்கு கண் பார்வை பறிபோனதாக தகவல் வருகிறது.
அர்த்தம் இல்லை
இது குறித்து பேச அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். அவர் நடுநிலையுடன் செயல்படவில்லை. மக்கள் பிரச்னை பற்றி பேச அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். மக்கள் பிரச்னைகளை பேசவே எங்களை தேர்வு செய்துள்ளனர். பதற வைக்கும் மரணம் குறித்து பேசாவிட்டால் எம்எல்ஏ., ஆக தேர்வு செய்யப்பட்டதற்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும்.
படுகொலை
தொடர் மரணத்தால் மக்கள் கொதித்து போய் உள்ளனர். ஆர்பி உதய்குமார் கைது செய்யும் அளவுக்கு அடக்குமுறை செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். பேச அனுமதி கேட்ட உதயகுமாரை அலேக்காக தூக்கி வெளியேற்றினர். இது ஜனநாயக படுகொலை.
பதவி விலக வேண்டும்
திறமையற்ற அரசாங்கத்தால் கள்ளசாராயம் அருந்தி பலரும் உயிரிழந்துள்ளனர்.மக்கள் அதிகம் நடமாடும் மையப்பகுதியில் 3 ஆண்டு கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. மரணத்திற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும். கள்ளச்சாராய மரணத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் எத்தனை உயிர் பறிபோகும் என தெரியவில்லை.
தூண்டுதல்
கள்ளச்சாராய மரணத்தை மறைக்க கலெக்டர் முயற்சித்தார். அவர் நேர்மையுடன் செயல்பட்டு இருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். அரசின் தூண்டுதலினால் கலெக்டர் பொய் பேசினார். அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், கலெக்டர் மட்டும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
விற்பனைக்கு துணை
கள்ளச்சாராய விற்பனைக்கு தி.மு.க., முக்கிய புள்ளிகளுக்கு பங்கு உண்டு. இரண்டு கவுன்சிலர்கள் உடந்தையாக இருந்ததாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். முக்கிய நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்ததாக செய்தி வருகிறது. இது குறித்து போலீசார் விசாரிக்கவில்லை. கட்சிக்காரர்களை காப்பாற்றுவதில் உறுதியாக உள்ளனர். ஆளுங்கட்சி கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகிறது.
மவுனம்
இதை எல்லாம் தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு மரணம் ஏற்பட்டு உள்ளது. 25 ஆண்டுகள் கூட்டணி தொடரும் என்ற காங்கிரஸ் கட்சிக்கு எது நடந்தாலும் கவலையில்லை. அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் மட்டும் முக்கியம். கம்யூனிஸ்ட்கள் மேம்போக்காக பேசி உள்ளனர்.
சிபிஐ விசாரணை
பேச அனுமதி கேட்ட உதயகுமாரை கைது செய்ய முயற்சி செய்தனர். இது என்ன சர்வாதிகாரி ஆட்சியா?கள்ளச்சாராய விற்பனை குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். கடந்தாண்டு மரக்காணம் மதுராந்தகம் கள்ளச்சாராய சம்பவத்தின் போது இரும்புககரம் கொண்டு ஒடுக்குவதாக கூறினார்கள். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட திமுக, தற்போது மவுனம் காத்து வருகிறது. இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறினார்.