அரிவாளை ஓங்கினார் தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,: அரசு விழாவில் ஒப்பந்ததாரருக்கு அதிர்ச்சி
அரிவாளை ஓங்கினார் தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,: அரசு விழாவில் ஒப்பந்ததாரருக்கு அதிர்ச்சி
அரிவாளை ஓங்கினார் தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,: அரசு விழாவில் ஒப்பந்ததாரருக்கு அதிர்ச்சி
ADDED : மே 17, 2025 02:20 PM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் ஒப்பந்தக்காரரை பார்த்து அரிவாளை ஓங்கிய தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் ரூ 2.59 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையத்திற்கான கட்டட அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது, அங்கு வந்த முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., உதயம் சண்முகம், 'என்னை ஏன் விழாவிற்கு அழைக்கவில்லை' என ஆத்திரத்தோடு பேசினார்.
அந்தக் கட்டடம் கட்டும் ஒப்பந்தக்காரரை தகாத வார்த்தையில் பேசினார். தேங்காய் உடைக்கும் அரிவாளை, ஒப்பந்ததாரரை பார்த்து ஓங்கும் காட்சிகளும், வெட்டி விடுவேன் என ஆவேசமாக கூறியபடி தேங்காய் உடைத்தார். அவர் அரிவாளை ஓங்கியதை கண்டதும், அங்கிருந்த அலுவலர்கள், கட்சியினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.