செய்யாத தவறுக்கு மன்னிப்பா: முடியாது என்கிறார் கமல்
செய்யாத தவறுக்கு மன்னிப்பா: முடியாது என்கிறார் கமல்
செய்யாத தவறுக்கு மன்னிப்பா: முடியாது என்கிறார் கமல்

சென்னை: '' தவறு செய்து இருந்தால் மன்னிப்பு கேட்பேன். தவறு செய்யவில்லை என்றால் மன்னிப்பு கேட்க மாட்டேன்,'' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல் கூறியுள்ளார்.
'தக்லைப்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல், ' தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்தது ' என்றார். இதற்கு கன்னடத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என அம்மாநில அமைச்சர்கள், கன்னட அமைப்பினர் வலியுறுத்தினர். ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கமல் கூறி வந்தார். மன்னிப்பு கேட்காவிட்டால், படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான தேர்தலில் கமல் போட்டியிட உள்ளார். இதனையடுத்து அவர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பிறகு கமல் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா ஜனநாயக நாடு. சட்டம் மற்றும் நீதி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. மறைமுக அஜன்டா உள்ளவர்களை தவிர மற்றவர்கள் யாரும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பை யாராலும் சந்தேகப்பட முடியாது. கடந்த காலத்திலும் எனக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. நான் தவறு செய்து இருந்தால் மன்னிப்பு கேட்பேன். தவறு செய்யவில்லை என்றால் மன்னிப்பு கேட்க மாட்டேன். இது தான் எனது வாழ்க்கை முறை. இதில் மாற்றம் என்பது கிடையாது.
நாட்டுக்கு தேவை என்பதால், தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து உள்ளோம். இவ்வாறு கமல் கூறினார்.


