Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ புலிகள் காப்பகத்தில் மரங்கள் வெட்டி கடத்தல்; வன ஆர்வலர்கள் அதிர்ச்சி!

புலிகள் காப்பகத்தில் மரங்கள் வெட்டி கடத்தல்; வன ஆர்வலர்கள் அதிர்ச்சி!

புலிகள் காப்பகத்தில் மரங்கள் வெட்டி கடத்தல்; வன ஆர்வலர்கள் அதிர்ச்சி!

புலிகள் காப்பகத்தில் மரங்கள் வெட்டி கடத்தல்; வன ஆர்வலர்கள் அதிர்ச்சி!

ADDED : ஜூன் 09, 2025 11:26 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கொடமாடியில், புதிய சாலை அமைப்பதாக கூறி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதியின்றி வனத்துறையினரே அரியவகை மரங்களை வெட்டி கடத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தெற்கில் களக்காடு முதல் வடக்கில் முண்டந்துறை வரை புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சேர்வலாறு அணை அருகே உள்ள குடமாடியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் மலைப்பாதை வழியாக வாளையார் வரையிலும் ஒரு தடம் அமைந்துள்ளது. இந்த வாளையார் பகுதியில் வன வேட்டை தடுப்பு காவலர்களுக்கான ஓய்வறையும் உள்ளது.

புலிகள் காப்பக பகுதிகளில் மரங்களை வெட்ட, சாலை அமைக்க, புதிய கட்டடங்கள் கட்ட ஆகிய பணிகளுக்காக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும். இருப்பினும், கடந்த சில தினங்களாக வாளையார் பகுதியில் வனத்துறையினர் இயந்திரங்களைக் கொண்டு மரங்களை வெட்டி வருகின்றனர். இதற்கான எந்தவிதமான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதியும் பெறப்படவில்லை என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வனப்பகுதியில் கட்டளை மலை எஸ்டேட் உள்ளிட்ட சில தனியார் எஸ்டேட்கள் உள்ளன. 'காய்ந்த மரங்களை அப்புறப்படுத்துகிறோம்' என்கிற பெயரில், வெட்டிய மரங்களை லாரிகளில் ஏற்றி கடத்தும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இம்மரங்களை தனியார் நிலத்திலிருந்து எடுத்தவை எனக் கூறி, வனத்துறையிடமிருந்தே அனுமதி பெற்று கடத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், குடமாடி முதல் வாளையார் வரையிலான பகுதியில் புதிய சாலை அமைக்கவும், அதன் வழியாக முக்கிய அதிகாரிகள் மற்றும் விருந்தினர்களை ஜீப்புகளில் சுற்றுலா அழைத்து செல்லும் திட்டமும் சில வனத்துறை அதிகாரிகள் மூலம் செயல்படுத்தப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தச் செயல்கள் அனைத்தும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் வன சட்ட விதிகளுக்கு எதிரானவை என வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டி, மரங்களை வெட்டும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us