கர்நாடகா சட்டத்தை பின்பற்றுங்க; தமிழக அரசுக்கு அன்புமணி அறிவுரை
கர்நாடகா சட்டத்தை பின்பற்றுங்க; தமிழக அரசுக்கு அன்புமணி அறிவுரை
கர்நாடகா சட்டத்தை பின்பற்றுங்க; தமிழக அரசுக்கு அன்புமணி அறிவுரை
ADDED : ஜூன் 02, 2025 03:04 PM

சென்னை: புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டம், தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவை என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தினார்.
அவரது அறிக்கை:
கர்நாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கர்நாடக அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முன்னோடி மாநிலம் என்று கூறிக் கொள்ளும் தமிழகம். பல நூறு முறை வலியுறுத்தியும் கூட இத்தகைய சட்டங்களை இயற்ற மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசின் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் சட்டத்தின் 4. 4ஏ ஆகிய பிரிவுகளைத் திருத்தி கர்நாடக சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் கர்நாடக மாநிலம் முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது: அதேபோல், இதுவரை 18 ஆக இருந்த புகைப்பிடிப்பதற்கான வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை உடனடியாக 21 ஆக உயர்த்த வேண்டும்.தமிழ்நாட்டிற்கு தான் அந்தச் சட்டம் மிகவும் தேவையாகும்.
இந்தியாவில் 12 கோடி பேர் புகைப்பிடிக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அதுமட்டுமின்றி, இந்தியாவில் 18 வயதைக் கடந்த ஆண்களில் 25 விழுக்காட்டினரும். பெண்களில் 15 விழுக்காட்டினரும் புகைப்பிடிப்பது உலக சுகாதார நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் தான் இந்தியாவில் புகைக்க தடை விதிப்பது அவசியம் ஆகும்.
தமிழக அரசோ பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தையே இன்று வரை முறையாக செயல்படுத்த மறுக்கிறது. அதனால், பெண்களும், குழந்தைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும், புகைப் பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.