Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ இலங்கை சிறையில் இருந்து விடுதலை 4 மாதத்திற்கு பின் திரும்பிய மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து விடுதலை 4 மாதத்திற்கு பின் திரும்பிய மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து விடுதலை 4 மாதத்திற்கு பின் திரும்பிய மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து விடுதலை 4 மாதத்திற்கு பின் திரும்பிய மீனவர்கள்

ADDED : ஜூலை 05, 2025 03:01 AM


Google News
Latest Tamil News
சென்னை:இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் ஐந்து பேர், நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினர்.

ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் தமாஷ் ஜெயபால், நடராஜன் நம்புபிரகாஷ், முத்துமணியன், குமார் நம்பு பிரகாஷ் மற்றும் நடராஜன். இவர்கள், கடந்த பிப்., 26ம் தேதி, விசைப்படகில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, இலங்கை கடலோர காவல் படை ரோந்துக் கப்பல் வந்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி. ஐந்து பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தது. விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதாக, இலங்கை நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது. மீனவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாததால், இந்திய துாதரக அதிகாரிகள், 'எமர்ஜென்சி' சான்றிதழ் வழங்கினர். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து புறப்படும் 'ஏர் இந்தியா' விமானம் வாயிலாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை வந்தடைந்த ஐந்து மீனவர்களும், தமிழக அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us