விவசாயிகள் திடீர் மறியல் போராட்டம் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்
விவசாயிகள் திடீர் மறியல் போராட்டம் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்
விவசாயிகள் திடீர் மறியல் போராட்டம் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 26, 2025 12:41 AM

சென்னை:நெல் கொள்முதலுக்கான நிலுவைத்தொகை 800 கோடி ரூபாயை வழங்க வலியுறுத்தி, சென்னை அண்ணா சாலையில் நேற்று விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.
தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை, மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் வாயிலாக கொள்முதல் செய்வதற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அனுமதி வழங்கியது.
தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம், நேரடியாக நெல்லை கொள்முதல் செய்யாமல், தமிழ்நாடு நெல் மற்றும் அரிசி பதப்படுத்துதல் கூட்டமைப்பு என்ற தனியார் நிறுவனம் வாயிலாக கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்தது.
இந்நிறுவனம் டெல்டா மாவட்டங்களை தவிர்த்து, பல்வேறு மாவட்டங்களில் கொள்முதல் செய்த நெல்லுக்கு, உரிய பணத்தை தராமல், 800 கோடி ரூபாய் அளவிற்கு நிலுவை வைத்துஉள்ளது. இந்த தொகையை பெற்றுத் தர வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்காததால், அதிருப்தி அடைந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், நேற்று காலை அண்ணா சாலையில், 'ஸ்பென்சர் பிளாசா' அருகில் உள்ள தமிழ்நாடு நெல் மற்றும் அரிசி பதப்படுத்துதல் கூட்டமைப்பு தலைமை அலுவலகத்தின் முன் திரண்டனர்.
தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் அந்த அலுவலகத்திற்கு சென்று, அதிகாரிகளை சந்திக்க முயன்றனர்; அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால், அதிருப்தி அடைந்த விவசாயிகள் திடீரென பகல் 12:30 மணிக்கு அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஸ்பென்சர் சிக்னலில் துவங்கி, ஜெமினி மேம்பாலம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து முடங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்; ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் சிக்கித் தவித்தன.
சிறிது நேரத்தில் போலீசார் வந்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். விவசாயிகள் கலைந்து செல்ல மறுத்தனர்.
இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து, திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாயக்கூடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு தங்க வைத்தனர்.
மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக, சென்னை அண்ணா சாலையில் பகல் 2:30 மணி வரை வாகன நெரிசல் ஏற்பட்டது.