தேர்தல் வழக்கு: ஐகோர்ட்டில் நயினார் நாகேந்திரன் ஆஜர்
தேர்தல் வழக்கு: ஐகோர்ட்டில் நயினார் நாகேந்திரன் ஆஜர்
தேர்தல் வழக்கு: ஐகோர்ட்டில் நயினார் நாகேந்திரன் ஆஜர்
ADDED : ஜூன் 19, 2025 11:30 PM

சென்னை:லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில், ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தோல்வியடைந்த பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான ஆவணங்களை, சான்று ஆவணங்களாகப் பதிவு செய்தார்.
கடந்த லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ்; பா.ஜ., வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டனர். ராபர்ட் புரூஸ், 1.65 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து, நயினார் நாகேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.
மனுவில், 'தேர்தலில் வெற்றி பெற்ற ராபர்ட் புரூஸ், தன் பிரமாண பத்திரத்தில் அவரது பெயரிலும், மனைவி பெயரிலும் உள்ள சொத்து விபரங்கள் மற்றும் தன் மீதான குற்றவியல் வழக்குகளை மறைத்துள்ளார்' என, குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜரானார். பின், சாட்சி கூண்டில் ஏறி, சத்திய பிரமாணம் செய்து வாக்குமூலம் அளித்தார்.
அப்போது, ராபர்ட் புரூஸ்க்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள், சான்று ஆவணங்களாகப் பதிவு செய்யப்பட்டன.
இந்த ஆவணங்களை, தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ததாக, நயினார் நாகேந்திரன் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா தெரிவித்தார்.
அதற்கு ராபர்ட் புரூஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மைதிலி ஸ்ரீனிவாஸ், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணங்களை, நீதிமன்றத்தில் சான்று ஆவணங்களாகப் பதிவு செய்ய ஆட்சேபம் தெரிவித்தார்.
இதையடுத்து, ராபர்ட் புரூஸ் சம்பந்தப்பட்ட வழக்கில், கர்நாடகா உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட ஆவணங்கள், சான்று ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன.
கிட்டத்தட்ட 19 நிமிடங்கள் ஆவணங்கள் பதிவு தொடர்பாக நயினார் நாகேந்திரன் வாக்குமூலம் அளித்தார்.
பின், ராபர்ட் புரூஸ் தரப்பில் குறுக்கு விசாரணை செய்வதற்காக, வழக்கின் விசாரணையை, வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன், அன்றைய தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக உத்தரவிட்டார்.


