Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ராகுல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்: சொல்கிறார் முன்னாள் தேர்தல் கமிஷனர்

ராகுல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்: சொல்கிறார் முன்னாள் தேர்தல் கமிஷனர்

ராகுல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்: சொல்கிறார் முன்னாள் தேர்தல் கமிஷனர்

ராகுல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்: சொல்கிறார் முன்னாள் தேர்தல் கமிஷனர்

UPDATED : செப் 14, 2025 07:23 PMADDED : செப் 14, 2025 07:19 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ''ஓட்டுத் திருட்டு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவிக்கும் குற்றச்சாட்டு குறித்து தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தியிருக்க வேண்டும் ,'' என முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்ஓய் குரேஷி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஓட்டு திருடப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். இதனை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. தனது குற்றச்சாட்டை வலியுறுத்தி பீஹாரில் ராகுல் பேரணி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், 2010 முதல் 2012ம் ஆண்டு வரை தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த எஸ்ஓய் குரேஷி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேர்தல் கமிஷன் மீது விமர்சனம் வரும் போது எனக்கு வேதனையாக இருக்கும். குடிமகனாக மட்டும் அல்லாமல், தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த காரணத்தினாலும் வேதனை ஏற்படும். அந்த அமைப்பை கட்டமைக்க நானும் பணியாற்றி உள்ளேன்.

அமைப்பு தாக்குதலுக்கு உள்ளாவதையும், பலவீனப்படுத்தப்படுவதையும் பார்க்கும் போது எனக்கு கவலை ஏற்படும். தேர்தல் கமிஷனும் தன்னை மறுபரிசோதனை செய்து கொண்டு கவலைப்பட வேண்டும். தங்கள் முடிவுகள் மீது வரும் அழுத்தத்தை கண்டுகொள்ளாமல் உறுதியாக நிற்க வேண்டியது அவர்களின் கடமையாகும்.

தேர்தல் கமிஷன் மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை பெற வேண்டும். என்னை பொறுத்தவரை, கண்காணிப்பாளர்களாக இருப்பதால், எதிர்க்கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பேன். ஆளுங்கட்சி அதிகாரத்தில் இருப்பதால், அதற்கு கவனம் தேவையிருக்காது. ஆனால், அதிகாரத்தில் இல்லாத எதிர்க்கட்சிக்கு கவனம் தேவைப்படுகிறது.

நான் பதவியில் இருக்கும் போது, தேர்தல் கமிஷனின் கதவுகளை திறந்துவைப்பதுடன், எதிர்க்கட்சிகள் நேரம் கேட்டால் உடனடியாக ஒதுக்கி தர வேண்டும் எனவும், அதன் மீது கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன்.

ராகுல், எதிர்க்கட்சி தலைவர். தேர்தல் கமிஷன் அவரை அணுகும் விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் என்பவர் தனி நபர் அல்ல. லட்சக்கணக்கான மக்களின் குரலாக இருக்கிறார். அவரிடம் ஒரு பிரமாணப் பத்திரத்தை கொடுங்கள் இல்லையென்றால் நாங்கள் இதை செய்வோம் அல்லது அதை செய்வோம் என்று கூறுவது ஆட்சேபனைக்குரியது.

ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து தேர்தல் கமிஷன் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் மட்டும் அல்ல. வேறு யாராவது புகார் அளித்து இருந்தால் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடுவது வழக்கமான நடைமுறை. தேர்தல் கமிஷன் நியாயமாக இருப்பது போல் தோன்ற வேண்டும். விசாரணை மட்டுமே உண்மைகளை வெளிக்கொண்டு வரும். எனவே அவர்கள் ஒரு வாய்ப்பை தவற விட்டுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us