12 மணி நேரம் கைதிகள் போல் அடைக்கப்பட்ட விமான பயணிகள்: எமிரேட்ஸ் விமான தாமதத்தால் அவதி
12 மணி நேரம் கைதிகள் போல் அடைக்கப்பட்ட விமான பயணிகள்: எமிரேட்ஸ் விமான தாமதத்தால் அவதி
12 மணி நேரம் கைதிகள் போல் அடைக்கப்பட்ட விமான பயணிகள்: எமிரேட்ஸ் விமான தாமதத்தால் அவதி
UPDATED : ஜூன் 18, 2024 12:52 PM
ADDED : ஜூன் 18, 2024 11:11 AM

சென்னை: சென்னையில் இருந்து துபாய்க்கு அதிகாலை 4 மணிக்கு கிளம்ப வேண்டிய எமிரேட்ஸ் விமானம், 12 மணி நேரம் கடந்தும் கிளம்பாமல் இருந்தது. விமான நிலையத்தில் பயணிகள் வெளியே விடாமல், கைதிகள் போல் அடைத்து வைக்கப்பட்டதால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து இன்று ( ஜூன் 18) காலை 4 மணிக்கு துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் கிளம்ப இருந்தது. இதில் பயணிக்க வேண்டிய பயணிகள் இரவு 12 மணிக்கே விமான நிலையம் வந்து விட்டனர். அவர்கள் கொண்டு வந்த உடைமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. சரியாக 4 மணிக்கு விமானம் கிளம்பி விடும் என நம்பிக்கையுடன் காத்திருந்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நண்பகல் 12 மணியை தாண்டியும் விமானம் கிளம்பவில்லை. அதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. தாமதத்திற்கான சரியான பதிலையும் அவர்கள் கூறவில்லை. நேரம் ஆக ஆக, பயணிகள் பொறுமை இழந்தனர். அவர்கள், விமான நிலையத்தில் கைதிகள் போல் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாலும் அவர்களின் கோபம் அதிகரித்தது.
இதனால், பயணிகள் டிக்கெட் ரத்து செய்ய முடிவு செய்தாலும் அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அவர்களின் உடைமைகள் திருப்பியும் தரப்படவில்லை. வெளியே செல்லவும் அனுமதி வழங்கவில்லை.
இதனால், விமானத்தில் பயணிக்க இருந்த குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் கடும் அவதிப்பட்டனர். ஒரு கட்டத்தில் வேறுவழியின்றி, விமான நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.