நாய்கள் இனப்பெருக்க நிலையங்கள் விலங்கு நல வாரிய உரிமம் பெற உத்தரவு
நாய்கள் இனப்பெருக்க நிலையங்கள் விலங்கு நல வாரிய உரிமம் பெற உத்தரவு
நாய்கள் இனப்பெருக்க நிலையங்கள் விலங்கு நல வாரிய உரிமம் பெற உத்தரவு
ADDED : செப் 02, 2025 10:26 PM

திருப்பூர்: நாய்கள் இனப்பெருக்கம் செய்வோர் மற்றும் செல்லப்பிராணி வளர்ப்போர், கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறையை பலரும் பின்பற்றாத நிலையில், உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி, தமிழ்நாடு விலங்கு நல வாரியம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
'இதுவரை உரிமம் பெறாதவர்கள், வரும், 30ம் தேதிக்குள் உரிமம் பெற வேண்டும்; தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும், அந்த உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய விலங்கு நல வாரிய உறுப்பினர் முருகேஸ்வரி கூறியதாவது:
வீடுகளில் வைத்து நாய், பூனை ஆகியவற்றை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்வது, விதிப்படி தவறு. வளர்க்கும் ஆசையில் அவற்றை வாங்குவோர், அவற்றுக்கு உரிய முறையில் தடுப்பூசி செலுத்துவதில்லை; முறையாக பராமரிப்பதில்லை.
'பிட் புல்' போன்ற தடை செய்யப்பட்ட நாய்களை வளர்ப்போர், அதனால் கடிபடும் சம்பவமும் நடக்கிறது. இது போன்ற வெளிநாட்டு ரக நாய்கள் தான், இத்தகைய ஆக்ரோஷத்துடன் இருக்கும்.
செல்லப்பிராணிகள் வளர்ப்பில் நடக்கும் இது போன்ற அசம்பாவிதம் மற்றும் தொந்தரவுகளை தவிர்க்கும் நோக்கில் தான், நாய் வளர்ப்போர் மற்றும் இனப்பெருக்கம் செய்வோர் உரிமம் பெற வேண்டும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிப்பு செய்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை, விலங்கு நல வாரியம் வகுத்துள்ளது.
உரிமம் பெறுவோர், கால்நடை பராமரிப்புத்துறையின் கண்காணிப்பில் இருப்பர் என்பதால், செல்லப்பிராணிகளை அனாதையாக விடுவது, அவற்றை முறையாக பராமரிக்காமல் இருப்பது போன்ற தவறுகள் தெரிய வரும்; அவற்றை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.