கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி மட்டுமல்ல வேட்பாளர்களையும் பரிந்துரைக்கிறது தி.மு.க.,
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி மட்டுமல்ல வேட்பாளர்களையும் பரிந்துரைக்கிறது தி.மு.க.,
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி மட்டுமல்ல வேட்பாளர்களையும் பரிந்துரைக்கிறது தி.மு.க.,
ADDED : மே 18, 2025 04:23 AM

சென்னை: கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகளின் உத்தேச பட்டியலை தயாரித்து இருப்பதுடன், அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து, தி.மு.க., பரிந்துரை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., கூட்டணி வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., - வி.சி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற, தி.மு. க., திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்ப, ஒவ்வொரு தொகுதியிலும் பலமான வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்பதில், தி.மு.க., உறுதியாக உள்ளது. எனவே,இந்தாண்டு இறுதியில் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளை முடுக்கிவிட, அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ஒவ்வொரு தொகுதியிலும் மக்களிடம் செல்வாக்கு உள்ள நபர் யார்; யாரை வேட்பாளாராக நிறுத்தினால் வெற்றி கிடைக்கும் என்ற அடிப்படையில், தொகுதிக்கு மூன்று பேர் பட்டியலை, கட்சிக்கென பிரத்யேகமாக இயங்கும் ஆய்வு நிறுவனம் வாயிலாக தி.மு.க., சேகரித்து வருகிறது.
இதேபோல், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியலும், தி.மு.க., தரப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், அக்கட்சிகளின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற விபரமும், அதில் இடம்பெற்றுள்ளது.
அந்த பட்டியலை வழங்கி, அதன்படி வேட்பாளரை நிறுத்துமாறு, கூட்டணி கட்சி தலைவர்களிடம் பரிந்துரை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஒரு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை, அந்த கட்சி தலைமைதான் நிர்வாகிகளுடன் ஆலோசித்து தேர்வு செய்ய வேண்டும். ஆனால், கூட்டணிக்கு தலைமை வகிக்கிற கட்சி எப்படி தேர்வு செய்ய முடியும்?
தேர்தல் நெருக்கத்தில் இதுகுறித்த தகவல்களை தி.மு.க., தரப்பு, கூட்டணி கட்சியினரிடம் சொல்லி நெருக்கடி கொடுத்தால், அதை ஏற்க கூட்டணி கட்சிகள் மறுப்பு தெரிவிக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.