Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க., மேலிடம் சர்வே: எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம்

தி.மு.க., மேலிடம் சர்வே: எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம்

தி.மு.க., மேலிடம் சர்வே: எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம்

தி.மு.க., மேலிடம் சர்வே: எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம்

UPDATED : ஜூலை 01, 2025 05:56 AMADDED : ஜூலை 01, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
சட்டசபை தேர்தல் பணிகளை முழுவீச்சில் துவங்கியுள்ள தி.மு.க., தலைமை, வேட்பாளர்களை தேர்வு செய்ய, உளவுத்துறை உதவியை நாடியுள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் காணப்படும் அரசியல் சூழல், ஆளுங்கட்சியினர் மீதான அதிருப்தி நிலவரம் உள்ளிட்ட பல விவகாரங்களை, உளவுத்துறை தோண்டி துருவி எடுப்பதால், ஆளுங்கட்சி நிர்வாகிகளும், எம்.எல்.ஏ.,க்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

தேர்தல் பணி


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே இருப்பதால், கூட்டணியில் நீடிக்கும் கட்சிகளை வைத்தே, வரும் சட்டசபை தேர்தலையும் எதிர்கொள்வது என தி.மு.க., முடிவெடுத்துள்ளது.

அதற்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் தேர்தல் பணிகளை ஒதுக்கி இருக்கிறார்.

ஓட்டுச்சாவடி முகவர்கள் தங்கள் பகுதியில் 30 சதவீத வாக்காளர்களை, தி.மு.க., பக்கம் கொண்டு வருவதற்காக களமிறக்கப்பட்டு உள்ளனர்.

அதற்காக, 'ஓரணியில் திரள்வோம்' என்ற பெயரில், பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் முதல்வர். ஐந்து ஐந்து மாவட்டங்களாக பிரித்து, அனைத்து மாவட்டச் செயலர்களையும், நிர்வாகிகளையும் சென்னை அறிவாலயத்துக்கு அழைத்து பேசி வருகிறார்.

அதோடு, 234 தொகுதிகளிலும் கட்சி நிலையை அறிய, நான்கு 'சர்வே டீம்'களையும் களத்தில் இறக்கியுள்ள ஸ்டாலின், அதன் அடிப்படையில் கட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், மாவட்டந்தோறும் நேரடியாகவே சென்று, மக்கள் நலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதும், முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பதுமாக இருக்கிறார்.

ஒவ்வொரு ஊரிலும் 'ரோடு ஷோ' நடத்தி, மக்களை சந்திக்கும்போது, முதல்வர் மீது ஈர்ப்பு ஏற்படும்; ஆட்சி மீதான அதிருப்தி விலகும் என கணக்கு போடப்படுகிறது.

பணப் பட்டுவாடா


இந்நிலையில், கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்த ஆலோசனையை துவங்கிய முதல்வர் ஸ்டாலின், அதற்கு முன், தொகுதி நிலவரம், யாரை நிறுத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை, உளவுத்துறை வாயிலாக பெற முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து, உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:


ஆட்சி நிர்வாகத்திற்கு பின்புலமாக இருந்து செயல்பட உருவாக்கப்பட்டதுதான் உளவுத்துறை. ஆட்சி நிர்வாகத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் விஷயங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அரசுக்கு தெரிவிப்பதோடு, அதற்கான தீர்வுகளையும் அளிப்பது வாடிக்கை.

ஆனால், சமீப காலமாக எதிர்க்கட்சிகளை கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை மட்டுமே உளவுத்துறை செய்து வருகிறது.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் உளவுத்துறை அறிக்கையை முழுமையாக நம்புவர். தேர்தல் தொடர்பான அனைத்து செயல்பாடுகளிலும் உளவுத்துறை பங்களிப்பு இருக்கும். வேட்பாளர் தேர்வு முதல், பணப் பட்டுவாடா வரை உளவுத்துறையினர் உதவுவது உண்டு.

தற்போது உளவுத் துறையினர் மட்டுமின்றி, தனியார் சர்வே அமைப்புகளையும் தி.மு.க.,வுக்காக பணியாற்ற முதல்வர் ஸ்டாலின் பணித்திருக்கிறார்.

மக்கள் செல்வாக்கு


ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியில் யார் செல்வாக்கு மிக்கவர்; கட்சிக்கு வெளியே யாரெல்லாம் மக்கள் செல்வாக்கோடு இருக்கின்றனர்; அவர்களில் யாரெல்லாம் தி.மு.க., அனுதாபியாக உள்ளனர்.

ஒருவேளை, அவர்களில் ஒருவர் வேட்பாளர் ஆக்கப்பட்டால், அவர் அதை ஏற்பாரா என்பது குறித்த விபரங்கள், தனியார் சர்வே அமைப்புகள் சார்பில் சேகரிக்கப்பட்டு விட்டன.

ஆனாலும், இறுதி அறிக்கை ஒன்றை, தமிழக உளவுத் துறையிடம் இருந்து பெற்று, அதன் அடிப்படையில் வேட்பாளர் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின். அதன்படி, தமிழகம் முழுதும் மக்களை சந்தித்து, தகவல் திரட்டும் பணியில் உளவுத்துறை போலீசார் இறங்கி உள்ளனர்.

தொகுதிக்குள் செல்வாக்குள்ள கட்சிக்காரர் யார்; மக்களோடு எந்த அளவில் நெருக்கம்; கட்சியினரோடு அந்த நபருக்கு உள்ள நெருக்கம்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால், எவ்வளவு சதவீத ஓட்டுகள் கிடைக்கும்; தி.மு.க.,வே போட்டியிடலாமா அல்லது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கலாமா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் உளவுத்துறை சேகரித்து வருகிறது.

இது தவிர, கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி; உள்ளிட்ட தகவல்களையும் உளவுத்துறை சேகரிக்கிறது.

இந்த தகவல் சேகரிப்பு விஷயம், ஆளுங்கட்சி புள்ளிகள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை கலங்க வைத்திருக்கிறது. தங்களுடைய செயல்பாடுகள் குறித்து முதல்வருக்கு தகவல் கொடுத்துவிட்டால், 'சீட்' கிடைக்காமல் போகலாம் என்பதால் விரக்தியில் உள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us