வரி விதிப்பில் ரூ.150 கோடி முறைகேடு; மதுரை மாநகராட்சியில் தி.மு.க.,வுக்கு நெருக்கடி
வரி விதிப்பில் ரூ.150 கோடி முறைகேடு; மதுரை மாநகராட்சியில் தி.மு.க.,வுக்கு நெருக்கடி
வரி விதிப்பில் ரூ.150 கோடி முறைகேடு; மதுரை மாநகராட்சியில் தி.மு.க.,வுக்கு நெருக்கடி

மதுரை:மதுரை மாநகராட்சியில் தனியார் கட்டடங்கள், புதிய வீடுகளுக்கு விதிமீறி வரி நிர்ணயம் செய்தது தொடர்பாக, 150 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்த விவகாரத்தில், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள மார்க். கம்யூ., கட்சிகள் எதிர்ப்பு காரணமாக, தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் கட்டடங்களுக்கான வரிவிதிப்பு, வரி வசூல் பணிகள் ஆன்லைனில் நடக்கிறது.
நடவடிக்கை
புதிய கட்டடங்களுக்கு, அவை இடம் பெற்றுள்ள மாநகராட்சி பகுதிக்கு ஏற்ப வரி விதிப்பு நிர்ணயிக்கப்படும். வரிவிதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் நீதிமன்றம் உத்தரவு அல்லது மாநகராட்சி கூட்டம் தீர்மானம் அடிப்படையில் தான் மேற்கொள்ள முடியும்.
ஆனால் 2022 - 2023, 2023 - 2024ல் மண்டலம் 2, 3, 4, 5 ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு வரிவிதிப்பு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2024ல் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா தலைமையில் கவுன்சிலர்கள் இக்குற்றச்சாட்டை எழுப்பினர்.
அப்போதைய கமிஷனர் தினேஷ்குமார் இதுகுறித்து விசாரிக்க மாநகராட்சி உதவி கமிஷனர்கள் குழுவை ஏற்படுத்தினார்.
அக்குழு அறிக்கையின்படி, அப்போது 13 பில் கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்தார்.
இந்நடவடிக்கைக்கு ஆளுங்கட்சி உட்பட அரசியல் ரீதியான எதிர்ப்பு கிளம்பியதால் விசாரணை கிடப்பில் போடப்பட்டது. ஆனால் சைபர் கிரைம் போலீசில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில், வரிவிதிப்புக்கு அனுமதி அளிக்கும் மாநகராட்சி அதிகாரிகளின் 'பாஸ்வேர்டுகளை' பயன்படுத்தி முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. தற்போதைய கமிஷனர் சித்ரா அனுமதியுடன் இந்த வழக்கு விசாரணை தற்போது மீண்டும் சூடுபிடித்தது.
சைபர் கிரைம் போலீஸ் அறிக்கையை பெற்று, மதுரை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி தலைமையில் நடந்த விசாரணையில், மண்டலம் 3ன் அலுவலகத்தில் அதிக முறைகேடு நடந்தது தெரியவந்தது.
இதன் எதிரொலியாக அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், மண்டலம் 3ன் தலைவர் பாண்டிச்செல்வியின் நேர்முக உதவியாளர் தனசேகரன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், புரோக்கர்கள் உட்பட எட்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடும் நெருக்கடி
கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 100 வார்டுகளிலும் சில மண்டல தலைவர்கள், தி.மு.க., பிரமுகர்கள், மாநகராட்சி அலுவலர்கள், புரோக்கர்கள் என மொத்தம், 55 பேருக்கு இம்முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர் பட்டியலை போலீசார் தயார் நிலையில் வைத்து உள்ளனர்.
விசாரணையை மேலும் தொடர்ந்தால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க.,விற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் தொடர் விசாரணைக்காக ஆளுங்கட்சி தலைமையின் 'கிரீன் சிக்னலுக்கு' போலீசார் காத்திருக்கின்றனர்.
இந்த விவகாரத்தை தி.மு.க., கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ., கையில் எடுத்துள்ளது. ''மாநகராட்சி முறைகேடு தொடர்பாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
''இது மிகப்பெரிய நெட் ஒர்க் மூலமாக நடந்துள்ள முறைகேடாக உள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய ஐந்து மண்டலங்களிலும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கூறுகையில், ''ரூ.150 கோடி வரை தி.மு.க., புள்ளிகள், அதிகாரிகள் இணைந்து நடத்தியுள்ள இந்த முறைகேட்டை மாநில போலீஸ் விசாரித்தால் உண்மை நிலவரம் வெளிவராது. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என, வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தை சாதாரணமாக கடந்து சென்றால் தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்க முடியாது. நடவடிக்கை எடுத்தால் தி.மு.க.,வினர் பலர் சிக்கி, கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் இவ்விவகாரத்தில் தி.மு.க., தலைமைக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.